அனைத்து மத விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும்: உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு; பிப்.17 முதல் தொடர் விசாரணை

புதுடெல்லி: சபரிமலையில் தரிசனத்திற்கு பெண்களை அனுமதிப்பது உள்பட அனைத்து மத விவகாரங்களையும் தற்போது உள்ள 9 நீதிபதிகள் அமர்வே விசாரணை மேற்கொள்ளும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை வரும் 17ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறும். சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்யலாம் என்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 64க்கும் மேலான மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வரராவ், எம்.எம்.சந்தானகவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இதில் கடந்த 6ம் தேதிக்கு வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் பரிந்துரைக்கப்பட்டதில் சில விஷயங்களை கருத்தில் கொண்டு தீர ஆராய வேண்டும் என்பதில் நீதிமன்றம் தெளிவாக உள்ளது என்றும், சபரிமலை தொடர்பான மறுஆய்வு மனுவை அரசியல் சாசனத்தின் உயர் அமர்விற்கு பரிந்துரைக்க முடியுமா? என்பது குறித்து வரும் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறியிருந்தது. இந்த நிலையில் சபரிமலை தொடர்பான வழக்கில், அரசியல் சாசன அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கை தற்போது உள்ள 9 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரணை மேற்கொள்ளும். வேறு அமர்விற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக நாங்கள் முந்தைய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு எழுப்பிய ஏழு கேள்விகளை மட்டுமே ஆராய உள்ளோம்.

அதாவது, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மசூதிக்குள் சென்று வழிபாடு நடத்துவது. மேலும், பார்சிகளின் வழிபாட்டு தலங்களில் நுழைவது, மதரீதியாக போராடும் முஸ்லிம் பெண்களுக்கான பிரச்னை ஆகியவையெல்லாம் வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா? என்பவை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரம் மட்டுமின்றி அனைத்து மத வழிபாடு மற்றும் சுதந்திரம் தொடர்பாகவும் விசாரிக்கப்படும்.  

மேலும் இதுதொடர்பான வழக்கை வரும் 12ம் தேதி அதாவது புதன்கிழமை முதல் விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தலைமை நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், சபரிமலை வழக்கை வரும் 12ம் தேதியை தவிர்த்து, வேறு விசாரணை தேதியை மாற்றி வைக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி வழக்கு வரும் 17ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டார்.

Related Stories: