தமிழகம்-ஆந்திராவை இணைக்கும் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி திடீர் நிறுத்தம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

வேலூர்: தமிழகம்-ஆந்திராவை இணைக்கும் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். காட்பாடி-சித்தூர் சாலையில் தமிழகம்-ஆந்திராவை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக காட்பாடி உள்ளது. கடந்த 1989ம் ஆண்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் காட்பாடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு காட்பாடியில் இருந்து ஆந்திராவிற்கும், ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கும் முக்கிய போக்குவரத்து தடமாக மாறியது. மேலும் தினந்தோறும் சுற்றுலா பஸ்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என்று அனைத்து வாகனங்களும், இந்த மேம்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். காலப்போக்கில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க தற்போதுள்ள பாலத்தை கடக்க சுமார் அரைமணி நேரம் ஆகிவிடுகிறது.

இதனால் அவ்வழியாக செல்லும் ஆம்புலன்ஸ்கள், பள்ளி வாகனங்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் என்று மக்கள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகின்றனர். இதற்கிடையில் ரயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடையும் நிலையில் காணப்பட்டது. எனவே, ரயில்வே பாலத்தை சீரமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ₹2 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்பேரில் டெண்டர் விடப்பட்டு, சீரமைப்பு பணிகள் தொடங்கியது. புதிய தொழில்நுட்பமான கார்பன் பைபர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீரமைக்கப்படும் என்றும், இப்பணி 3 அல்லது 4 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பணிகள் தொடங்கி கடந்த 2 மாதங்களாக இரவு பகலாக விறுவிறுப்பாக நடந்தது.

ஆனால் சில நாட்களாக பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. பாதி அளவு பணி மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் முழுமை பெறவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மேம்பாலம் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் இருபுறங்களிலும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. சாலையை இந்த கம்பிகள் ஆக்கிரமித்துள்ளன. வாகனங்களும் மெதுவாக இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய லாரிகள் வந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணி வகுக்கிறது. அவசரத்துக்கு கூட அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பாலத்தை கடக்க பெரும்பாடு பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் இந்த மேம்பால சீரமைப்பு பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: