தேனி: தேனி மாவட்டத்திலுள்ள முல்லை பெரியாற்றில் பகல் நேரங்களிலேயே மணல் கடத்தல் பகிரங்கமாக நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் முல்லை பெரியாறு மற்றும் வைகை ஆறுகளில் மணல் சுரண்டுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் மீண்டும், மணல் கொள்ளையர்கள் தலைதூக்க தொடங்கியுள்ளது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரவு நேரங்களில் மட்டும் ஆற்றில் மணல் அள்ளும் கும்பல், இப்பொழுது பகல் நேரங்களிலும் மணல் அள்ளத் தொடங்கியுள்ளது. ஆற்றிலிருந்து அள்ளும் மணலை கரையோரமாக சேமித்து வைத்து பின்னர், டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் எடுத்து செல்கின்றனர்.
