காட்பாடி டெல் காட்டுப்பகுதியில் முகாம் அரிசி ஆலைக்குள் புகுந்து சூறையாடிய யானைக்கூட்டம்

வேலூர்: காட்பாடி டெல் பகுதி அருகே 14 காட்டு யானைகள் முகாமிட்டு  சுற்றித்திரிகிறது. மேலும், குடியாத்தம் அருகே அரிசி ஆலையை சூறையாடிய 3 யானைகள், பைக்கில் சென்றவர்களை துரத்தியதால் 6 பேர் காயம் அடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் நுழைந்த 14 யானைகள் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வெடிமருந்து தொழிற்சாலை (டெல்) அருகே முகாமிட்டுள்ளன. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘14 காட்டு யானைகளையும் ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளோம்.  அவை, புதிய திசை நோக்கி செல்லாமல் அந்த பகுதியிலேயே சுற்றித்திரிகிறது. இவற்றை விரட்டுவதற்காக தினமும் 500 வாண வெடிகளை தருவித்து வெடித்து வருகிறோம். இருப்பினும் யானைகள் துளியும் பயமின்றி அப்பகுதியிலேயே சுற்றித்திரிய தொடங்கியுள்ளது.

எனவே கிராமப்புற மக்கள் வனப்பகுதிகளுக்குள் கால்நடைகளை ஓட்டி செல்லவேண்டாம். இந்த யானைகளால் இதுவரை மனிதர்களுக்கோ அல்லது பிற உயிரினங்களுக்கோ தீங்கு ஏற்படவில்லை. இருப்பினும் வனப்பகுதிக்கு செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் செல்வது அவசியம்’ என்றனர்.இதற்கிடையே, நேற்றுமுன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அனுப்பு  கிராமத்திற்குள் 3 யானைகள் புகுந்தது. அங்கு மணி என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் இருந்த நெல் மூட்டைகளை சூறையாடியது. தகவல் அறிந்த வனத்துறையினர் வந்து பொதுமக்களின் உதவியுடன் யானைகளை விரட்டினர். மேலும், சாமிரெட்டிபல்லி அடுத்த கொத்தூர் கிராமத்தை சேர்ந்த 6 பேர் 3 பைக்கில் டி.பி.பாளையத்திற்கு வந்தனர். அப்போது பைக்கில் சென்றவர்களை பார்த்த யானைகள் அவர்களை துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பைக்கில் இருந்து கீழே விழுந்து தப்பியோடினர். அதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: