மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படுமா?

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் இடநெருக்கடியால், மார்க்கெட் சாலையில் உள்ள காளைச்சந்தை மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு போதிய வசதிகள் இல்லாததால் கடந்த திமுக ஆட்சியின்போது, 3  கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.கடந்த 2009ல் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் பணி தொடங்கி வைக்கப்பட்டது. 2010 முதல் பணிகள் நடந்து வந்தன. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்ததால் மூன்றாண்டுகள்  இழுத்தடிப்புக்கு பின் கடந்த 2013ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் திறப்பு விழா கண்டது.

இருப்பினும் பஸ் நிலையம் செல்லும் மார்க்கெட் சாலை ஆக்ரமிப்பு மற்றும் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடியில்  சிக்கி வருகிறது. இதனால் பல பஸ்கள் பஸ் நிலையத்துக்கு வராமல் சென்று விடுகின்றன. இதுபோல பஸ் நிலையத்தில் இதுவரை போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்துக்கு ஆம்னி பஸ்களும் துணைபுரிந்து வருகின்றன.

பொதுவாக அனைத்து இடங்களிலும் ஆம்னி பஸ்கள், பஸ் நிலையங்கள் அல்லது அவற்றுக்கு மிக அருகில் இருந்து இயக்கப்படுவது  வழக்கம். இந்த நிலையில் மார்த்தாண்டத்தில் மட்டும், நெருக்கடியை காரணம் காட்டி சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள சிராயன்குழி பகுதியில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு  வருகிறது. மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் மிக அருகில் ரயில் நிலையம் உள்ளது. இதனால் ஆம்னி பஸ்களையும் பஸ் நிலையத்தில் இருந்த இயக்கினால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

சிராயன்குழி பகுதியில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆம்னி பஸ்களை பஸ் நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது. ஆம்னி பஸ்களை பஸ் நிலையத்தில் இருந்து இயக்க நகராட்சி அனுமதி வழங்க தயாராக உள்ளது என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: