கேகே பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இருக்கைகள் வாங்க முன்னாள் அதிமுக எம்பி ஒதுக்கிய நிதி எங்கே? பல வகுப்பறைகளில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

கம்பம்: கம்பம் அருகே உள்ள கேகே பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இருக்கை வாங்க, முன்னாள் தேனி அதிமுக எம்பி 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி 2 ஆண்டுகளாகியும் இருக்கை வந்து சேரவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் அவலம் தொடர்கிறது. கம்பம் அருகே உள்ளது காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி, இங்கு 1956ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. பின் 1997ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆங்கிலக் கல்வி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வந்ததால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படித்துவந்த இந்த பள்ளியில் தற்போது மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை சுமார் 300 ஆக குறைந்துள்ளது.

இப்பகுதியிலுள்ள கருநாக்கமுத்தன்பட்டி அரசு பள்ளி, குள்ளப்ப கவுண்டன்பட்டி அரசுப்பள்ளி, கேகேபட்டி தனியார் மெட்ரிக் பள்ளிகளின் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு மையமாகவும் இப்பள்ளி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்போதைய தேனி எம்பி பார்த்திபனிடம் பள்ளி ஆசிரியர்கள், வகுப்புகளில் டெஸ்க், பெஞ்சுகள் சேதமடைந்துள்ளன.

இதனால் மாணவ,மாணவியர்கள் தரையில் அமர்ந்து சிரமத்துடன் படிக்கின்றனர் அதனால் உதவி செய்யவேண்டும் எனக்கூறி உள்ளனர். இதற்கு எம்பியும் உதவித செய்வதாக உறுதி கூறி உள்ளார். இதையடுத்து ஒருசிலமாதங்களில் இந்த பள்ளிக்கு எம்பி நிதியில் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளதாக தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து ஒருசில வாரங்களில் கேகேபட்டி பேரூராட்சியில் இருந்து பள்ளிக்கு வந்த அதிகாரிகள், உங்கள் பள்ளிக்கு எம்பி நிதியில் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளனர். பள்ளிக்கு தேவையான டெஸ்க் மற்றும் பெஞ்சுகளுக்கான கொட்டேஷன் வாங்கவேண்டும் எனக்கூறி உள்ளனர். இதனால் இப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளுக்கு உபகரணங்கள் சப்ளை செய்யும் கல்லுப்பட்டியிலுள்ள ஓரு நிறுவனத்திற்குச் சென்று பெஞ்சு, டெஸ்குகளை பார்வையிட்டனர். அப்போது அதிகாரிகள் உங்கள் பள்ளிக்கு 68 செட்டு டெஸ்குகள் வழங்கப்படும் எனக்கூறி உள்ளனர்.

ஆனால், ஆண்டுகள் இரண்டுகளாகியும் பேரூராட்சி நிர்வாகம், பள்ளிக்கு இந்த உபகரணங்கள் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவ, மாணவியர்கள் பள்ளி வகுப்பறையில் தரையில் அமர்ந்து படிக்கும் அவலம் தொடர்கிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தில் கேட்கும்போதெல்லாம், விரைவில் வந்துவிடும் என்ற பதில் மட்டுமே வருவதாக முன்னாள் ஆசிரியர்களும், பொதுநலவிரும்பிகளும் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மூடுவிழா காணும் நிலையில், இத்தனை மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு தேவையான வசதிகள் கிடைக்க அரசு உடனே ஏற்பாடு செய்யவேண்டும் என்றனர்.

பொதுத்தேர்வு வருவதற்குள் இருக்கை வந்தால் நல்லது

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணன் கூறுகையில், இப்பள்ளிக்கு இருக்கைகள் வாங்க எம்பி நிதியில் ரூ 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சியிலிருந்து தெரிவித்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் எதுவும் வழங்கவில்லை. இதனால் பல வகுப்புகளில் மாணவ, மாணவியர்கள் தரையில் அமர்ந்து படிக்கின்றனர். வரும் மார்ச் மாதத்திலிருந்து 10,11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்குள் புது இருக்கைகள் வந்து சேர்ந்தால் மாணவர்களுக்கு தேர்வு எழுத வசதியாக இருக்கும். அரசு இதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார். கேகேபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசனிடம் தகவல் கேட்க இருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும், மீட்டிங்கில் இருப்பதாகக்கூறி பதில் சொல்ல மறுத்து விட்டார்.

Related Stories: