ரூ.250 கட்டணத்தில் தரிசனம் செய்பவர்களுக்கு திருச்செந்தூர் கோயிலில் இலவச லட்டு, இலை விபூதி வழங்க திட்டம்

திருச்செந்தூர்: பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும்,  சிங்கப்பூர், மலேசியா  போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு  முழுவதும் திருவிழா  களைகட்டும்.

எழில் கொஞ்சும் கடற்கரையுடன் கோயில் அமைந்துள்ளதால் பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா வந்தும் பொழுதை கழிப்பர். இங்கு நடைபெறும்   கந்தசஷ்டி, தைப்பூச திருவிழாக்களில் விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

நாளை மறுநாள் (8ம் தேதி) தைப்பூசத்தை  முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், நாகர்கோவில், செங்கோட்டை,  வள்ளியூர், தூத்துக்குடி, ராமநாதபுரம்  உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருப்பதி  மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்படுவதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலிலும்  பக்தர்களுக்கு இலவச புட்டமுது பிரசாதமாக வழங்க வேண்டும் என்று தினகரனில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக தற்போது ரூ.250 கட்டணத்தில் டிக்கெட் எடுத்து சுவாமியை தரிசனம் செய்பவர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு மற்றும் 3 இலை விபூதி   பிரசாத கவரில் வழங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ரூ.250 கட்டணத்தில் டிக்கெட் எடுத்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு வெளியே வரும்   பக்தர்களுக்கு கோயில் கொடிமரம் அருகே ஒரு லட்டு, 3 இலை விபூதி ஆகியவற்றை பிரசாத கவரில் வைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும்   தெரிகிறது.

Related Stories: