புற்றுநோய் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் அலட்சியம்: வாயில் முடி வளருவதால் கூலி தொழிலாளி அவதி...குமரி எல்லையில் பரபரப்பு

திருவனந்தபுரம்: குமரி எல்லையில் டாக்டர்களின் அலட்சியத்தால் தொழிலாளியின் வாயில் முடி வளர்ந்து வருகிறது. இதனால் அவர் மிகவும் அவதியடைந்து வருகிறார். குமரி எல்லையில்  உள்ள  வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (55). மரம் ஏறும் தொழிலாளி. கடந்த சில  மாதங்களுக்கு முன்பு இவரது வாய்க்குள் ஒரு  கட்டி வந்தது. அருகில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம்  என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்  திருவனந்தபுரம் புற்றுநோய் சிகிச்சை  மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அந்த கட்டியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தொடையில்  இருந்து சதை எடுத்து பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கு ஸ்டீபனும் சம்மதம்  தெரிவித்தார். இதன்படி அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்து ஸ்டீபன்  வீடு திரும்பினார். சில நாட்களுக்கு பின் அவரது வாய்க்குள்  முடி வளர தொடங்கியது.  நாள் செல்ல செல்ல முடி நீளமாக வளர்ந்தது.

இதனால் அவரால் சாப்பிடவோ, தண்ணீர்  குடிக்கவோ முடியவில்லை. அவர் டாக்டரிடம் சென்று காண்பித்தபோது அவர்கள் முறையாக  பதிலளிக்கவில்லை என  தெரிகிறது. மீண்டும் அவரை டாக்டரை தொடர்பு கொண்டபோது வளரும்  முடியை வெட்டிக்கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சையின் போது டாக்டர்கள் தொடையில் இருந்து சதை பகுதியை வெட்டி எடுப்பதற்கு பதிலாக கீழ் தாடையில் இருந்து சதைய வெட்டியுள்ளனர்.  இதனால் அந்த இடத்தில் முடிவளர்வது பின்னர் தெரியவந்துள்ளது. டாக்டர்களின் இந்த சிகிச்சையால் ஸ்டீபன் தொடர்ந்து அவதியடைந்து வருகிறார்.

Related Stories: