ஆதிச்சநல்லூரில் பணிகளை தமிழக தொல்லியல் ஆய்வு துறை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் பழந்தமிழர் நாகரிகத்தின் ஆதாரமாகத் திகழும் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழர்களுக்கு அடுத்த மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் குறித்த இரு அறிக்கைகள் மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்பதுதான் அது. மதுரையை அடுத்த கீழடியில் தமிழக தொல்லியல் துறை மேற்கொண்ட ஆராய்ச்சியில் கீழடி தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது.

ஆனால், ஆதிச்சநல்லூர் நாகரிகம் அதைவிட பழமையானதாகும்.  மத்திய தொல்லியல் துறை இதுவரை மொத்தம் 4 முறை ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும், எகிப்திய பிரமிடுகளில் உள்ளதைவிட பழமையான புதைகுழிகள் ஆதிச்சநல்லூரில் உள்ளன என்று அலெக்சாண்டர் ரீ அறிவித்ததை தவிர, ஆதிச்சநல்லூரின் சிறப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எனவே, ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டால் தமிழர் நாகரிகம்தான் உலகின் பழமையான நாகரிகம் என்பது உறுதி செய்யப்படும். அதற்கு வசதியாக ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை தொல்லியல்துறை விரைந்து வெளியிட வேண்டும். ஆதிச்சநல்லூரை ஒட்டிய தாமிரபரணியின் வடக்குப் பகுதியிலும், சிவகளை கிராமத்திலும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும், கட்டிடங்களும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வு நடத்துவதற்கான பணிகளை தமிழக தொல்லியல் துறை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: