தூக்கு தண்டனையை தாமதிக்க நிர்பயா குற்றவாளிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு தடை ஏற்படுத்துகின்றனர்: டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 குற்றவாளிகளும், தண்டனை தாமதப்படுத்தும் நோக்கத்தில் நீதிமன்றங்கள் மற்றும் ஜனாதிபதியிடம் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.  இதனால் அவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. முகேஷ் குமார் சிங் மற்றும் சர்மா ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ள நிலையில் 3வது குற்றவாளி அக்சய் தாக்கூர் நேற்று முன்தினம்  கருணை மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா குற்றவாளிகளுக்கான சட்டரீதியிலான தீர்வுகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், அவர்களை தூக்கில் போட, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து திகார் சிறை நிர்வாகம் டெல்லி உயர்  நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனுத்தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை சிறப்பு நீதிபதி சுரேஷ் கெய்த் முன்னிலையில் நேற்று நடந்தது.  

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகள், வேண்டும் என்றே, திட்டமிட்டு செயல்பட்டு சட்டத்தின் தீர்ப்பை தடுக்கின்றனர்.  அதனால் இவர்களின் தூக்கு தண்டனைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். இதற்கு குற்றவாளிகள் அக்‌ஷய் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சிங் எதிர்ப்பு தெரிவித்தார். மற்றொரு குற்றவாளி முகேஷ் குமார் சார்பில் ஆஜரான வக்கீல் ரெபேக்கா ஜான், ‘‘குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வாரன்ட் பிறப்பிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்தான் விசாரணை நீதிமன்றத்தில் மனு  செய்தனர். மத்திய அரசு அல்லது மாநில அரசு சார்பில் மனு செய்யப்படவில்லை. தற்போது மத்திய அரசு இந்த வழக்கில் திடீரென குறுக்கிடுகிறது. மத்திய அரசின் கோரிக்கை விசாரணைக்கு உகந்தது அல்ல’’ என்றார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: