கர்நாடக அமைச்சரவை பிப்.6ம் தேதி விரிவாக்கம்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை பிப்ரவரி 6ம் தேதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சர்களாக 13 பேர் பதவியேற்கிறார்கள் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட 14 பேரில் 12 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களாக இருந்தவர்கள். எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி மலர தங்கள் பதவியை  ராஜினாமா செய்து உதவி செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. பாஜவில் இணைந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இவர்கள் தங்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அதன்படி  மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா ஆகியோரை  முதல்வர் எடியூரப்பா கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது அமைச்சரவை விரிவாக்கம் செய்ய மேலிட தலைவர்கள் அனுமதி அளித்தனர்.

இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா நேற்று கூறுகையில், ‘‘வரும் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து  வைக்கிறார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை’’ என்றார்.புதிய அமைச்சர்கள் பட்டியலில், ரமேஷ் ஜார்கிஹோளி (கோகாக்), சீமந்த் பாட்டீல் (காகவாடா), ஆனந்த் சிங் (விஜய்நகர்), பி.சி.பாட்டீல் (ஹிரேகெரூர்), கே.கோபாலய்யா (மகாலட்சுமி லேஅவுட்), பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), கே.சுதாகர்  (சிக்கபள்ளாப்பூர்), எஸ்.டி.சோமசேகர் (யஸ்வந்தபுரம்), கே.சி.நாராயணகவுடா (கே.ஆர். பேட்டை), ஷிவராம் ஹெப்பார் (எல்லாபுரா), அரவிந்த் லிம்பாவளி (மகாதேவபுரா), உமேஷ் கத்தி (ஹுக்கேரி),  சி.பி.யோகேஷ்வர் (சென்னபட்ணா) ஆகியோர்  பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Related Stories: