உபி.யில் விடிய விடிய நடந்த பரபரப்பு சம்பவம் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபரை சுட்டுக்கொன்று 23 குழந்தைகள் பத்திரமாக மீட்பு

பருக்காபாத் :  உத்தர பிரதேசத்தில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 23 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். குழந்தைகளை பிடித்து வைத்திருந்த நபரை நேற்று அதிகாலையில் போலீசார் சுட்டுக் கொன்றனர். அவரது மனைவியை பொதுமக்கள் அடித்து கொன்றனர். உத்தரபிரதேசம் மாநிலம், பருக்காபாத் பகுதியில் உள்ள கசாரியா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் பாதம். கொலைக் குற்றவாளியான இவர், தனது மகளின் பிறந்த நாள் விழாவுக்காக நேற்று முன்தினம் 6 மாத குழந்தை முதல் 15 வயது வரையிலான 23 குழந்தைகளை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். நேற்று முன்தினம் மாலை 5.45 மணியளவில் அந்த 23 பேரையும் அவர் திடீரென பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். இது குறித்து அறிந்த குழந்தைகளின் பெற்றோர் கதறி அழுதனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுபாஷின் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அப்போது தன்னிடம்  பேச முயன்றவர்கள் மீது சுபாஷ் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 ேபாலீசார் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பல மணி நேர முயற்சிக்குப் பிறகு, நேற்று அதிகாலை போலீசாரும், தேசிய பாதுகாப்பு படையினரும் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து  சுபாசை சுட்டுக் கொன்றனர். பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 23 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். அப்போது அங்கிருந்து தப்பியோட முயன்ற சுபாஷின் மனைவியை பொதுமக்கள் கல்லால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி  அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குழந்தைகளை பத்திரமாக மீட்டது குறித்து கான்பூர் போலீஸ் ஐஜி மோகித் அகர்வால் அளித்த பேட்டியில், ‘‘பிணைக் கைதிகளாக குழந்தைகளை பிடித்து வைத்திருந்த சுபாஷ் பாதம், தனது தொகுதி எம்எல்ஏ.வுடன் மட்டும்தான் பேச வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, அவரை வரவழைத்து பேச சென்றபோது எம்எல்ஏ உடனும் அவர் பேச மறுத்தார். பிடிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் தரைதளத்தில் பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். நாங்கள் அவரை பிடிக்க முயன்றபோது அவர் 6 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். முன்னதாக, மாடியில் இருந்து 6 மாத குழந்தையை பக்கத்து வீட்டில் இருந்தவரிடம் சுபாஷ் கொடுத்துள்ளார்.  கொல்லப்பட்ட சுபாஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர்,’’ என்றார். குழந்தைகளை பத்திரமாக மீட்ட போலீஸ் குழுவுக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் போலீசாரை பாராட்டி சான்றிதழும் வழங்கப்பட்டது.

அமித்ஷா பாராட்டு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `பருக்காபாத் பகுதியில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 23  குழந்தைகளையும் பத்திரமாக மீட்க போராடிய போலீசாரின் தீவிர முயற்சியை பாராட்டுகிறேன். இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.

Related Stories: