சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் தரிசன வழக்கு பிப்ரவரி 3ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 3ம் தேதி விசாரணை நடத்த உள்ளது. சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்யலாம் என்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், எம்.எம்.சந்தானகவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான விசாரணையின்போது என்ன மாதிரியான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிமன்ற தலைமை பதிவாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் எனக்கூறி வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால், இதைத்தொடர்ந்து, வழக்கறிஞர்களுக்கு இடையே வாதங்களை முன்வைப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியவில்லை என மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், சபரிமலை தொடர்பான வழக்கை 10 நாட்களுக்கு மேல் விசாரிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கடந்த 28ம் தேதி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நேற்று ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில், சபரிமலை கோயில் விவகாரத்தில் மத நம்பிக்கை மற்றும் பெண்களுக்கான சமத்துவம் ஆகியவை குறித்து விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 3ம் தேதி கூட உள்ளது. இதையடுத்து அன்றைய தினம் வழக்கு தொடர்பான கேள்விகள், பிரச்னைகள், விசாரணை மற்றும் அதற்கான அட்டவணைகள் ஆகியவை குறித்து முழுவதுமாக ஆராயப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: