பிரதமர் குறித்து அவதூறு கலைநிகழ்ச்சி தனியார் பள்ளி மீது தேச துரோக வழக்கு பதிவு

பீதர்: குடியரசு தினவிழாவின் போது மாணவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறுதலாக சொல்லிக் கொடுத்து பிரதமர் நரேந்திர மோடியை இழிவாக பேச வைத்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கர்நாடக மாநிலம் பீதரில் தனியார் கல்வி நிறுவனம் சார்பில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவ மாணவிகள் கோஷம் எழுப்பினர். பிரதமர் நரேந்திரமோடியை மிகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி கோஷமிட்டனர். மாணவ மாணவிகளின் இதுபோன்ற நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தி மறியல், தர்ணா போராட்டங்களை நடத்தினர். இதனால் பீதரில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சமூக வலைதளங்களில் வைரலான காட்சிகளை ஆதாரமாக கொண்டு பீதர் போலீசார் தனியார் பள்ளி மீது தேச துரோகம் (124 பிரிவு), அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது (504 பிரிவு), நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவது (505(2) பிரிவு), மதத்தின் பெயரில் தூண்டுதலை ஏற்படுத்துவது (153ஏ பிரிவு) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

போலீஸ் எஸ்.பி. விளக்கம்:

இது  குறித்து பீதர் மாவ ட்ட போலீஸ் எஸ்.பி. டி.ஸ்ரீதர் கூறுகையில்; மேற்கண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் பள்ளிக்கு சென்று சில மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மாணவ மாணவிகளுக்கு நாட்டை பற்றி இழிவாக பேசவும், அதிகாரிகள் மற்றும் பிரதமரை தகாத வார்த்தைகளால் பேசவும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசவும் சொல்லிக்கொடுத்தது ஆசிரியர்களா அல்லது வேறு யாராவதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டோம். அப்போது சில மாணவ மாணவிகளை கட்டாயப்படுத்தி இதுபோன்ற வார்த்தைகள் சொல்லிக்கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்திய பின்னர்தான் முழு விவரமும், யார் குற்றவாளி என்பதும் தெரியவரும் என்றார்.

Related Stories: