பிப்.26 முதல் 28 வரை ரயில்வே கால அட்டவணை மாநாடு நாகர்கோவில் - நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாகுமா?: தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: பெங்களூரில் அடுத்த மாதம் இந்திய ரயில்வே கால அட்டவணை மாநாடு நடக்கும் நிலையில் நாகர்கோவில் - நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாகுமா? என தென் மாவட்ட ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

ரயில்வே துறை ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில் கால அட்டவணை வெளியிடுவது வழக்கம். கடந்த ஆண்டு ஜுலை மாதம் ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு ரயில் கால அட்டவணை தயாரிக்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த அட்டவணையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களின் நேரத்தை மாற்றி புதிய நேரத்தில் இயக்குதல், வேகத்தை அதிகரித்தல், முனையங்கள் மாற்றம் போன்ற அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புண்டு.ரயில்வே கால அட்டவணையில் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள், ரயில் பயணிகள் சங்கங்களின் கோரிக்கை அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்குதல், நீட்டிப்பு செய்தல், ரயில் சேவைகளை அதிகரித்தல் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படும். இதற்காக ரயில் கால அட்டவணை மாநாடு நடைபெறும். இந்த ஆண்டு ரயில் கால அட்டவணை மாநாடு பெங்களுரில் வருகிற பிப்.26 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் கன்னியாகுமரி - நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என தென் மாவட்ட ரயில் பயணிகள் எதிபார்க்கின்றனர். இந்தியாவின் கடைக்கோடியான குமரியில் இருந்து தலைநகர் புதுடில்லிக்கு போதிய ரயில் வசதி இல்லை. எனவே கன்னியாகுமரியிலிருந்து நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா, நாக்பூர், போபால் வழியாக புதுடில்லி நிஜாமுதீனுக்கு தற்போது வாரம் இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.தென் மாவட்ட பயணிகள் ரயில்களில் சென்னை சென்றுவர முன்பதிவு பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே நாகர்கோவிலிருந்து நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு தற்போது இயங்கி வரும் வாரம் மூன்று முறை ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

மும்பை - நாகர்கோவில் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும் என தென் மாவட்ட ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.இந்த கோரிக்கைகள் குறித்து மாநாட்டில் விவாதித்து ரயில்வே அதிகாரிகள் முடிவு எடுத்து கால அட்டவணையில் அறிவிக்க வேண்டும் எனவும் தென் மாவட்ட ரயில் பயணிகள் விரும்புகின்றனர்.

ஐதராபாத் ரயில் நீட்டிப்பு?

தெலங்கானா தலைநகரான ஐதராபாத்துக்கு செல்ல தென் மாவட்டங்களில் இருந்து நேரடி தினசரி ரயில் வசதி இல்லை. நெல்லை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் ஐதராபாத்துக்கு வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தமாக தினமும் சென்று வருகின்றனர். தற்போது தென் மாவட்டத்தினர் ஐதராபாத் செல்ல காலையில் சென்னை சென்று மாலையில் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு செல்லும் ரயிலில் பயணிக்க வேண்டியுள்ளது.  இதனால் பகல் நேரம் முழுவதும் சென்னையில் வீணாகிறது. எனவே சென்னையிலிருந்து ஐதாராபாத்துக்கு இயக்கப்படும் மூன்று தினசரி ரயில்களில் ஒரு ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இதனால் தமிழகத்தின் 12 மாவட்ட பயணிகள் நேரடி பயன்பெறுவர் என தென் மாவட்ட ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: