மதுரை மாநகரில் போலீசார் அதிரடி: அனுமதியின்றி ஓடிய ஆட்டோக்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாநகரில் அனுமதியின்றி இயக்கப்பட்ட டீசல் ஆட்டோக்களை போலீசார் பிடித்து, அவைகளின் பெர்மிட்களை ரத்து செய்து அபராதம் விதித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தின் 3 வட்டார போக்குவரத்து அலுவலங்களில் அனுமதி பெற்று இயங்கும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் குறித்த தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டது. இதன்படி மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய 3 அலுவலகங்கள் அடிப்படையில், 12 ஆயிரத்து 223 ஆட்டோக்களும், அனுமதி பெற்ற 7 ஷேர் ஆட்டோக்களும் மட்டுமே இயங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மதுரை நுகர்வோர் மைய நிர்வாகி விளக்கம் கேட்டு போக்குவரத்து கமிஷனருக்கும் கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து, திடீரென திருப்பரங்குன்றம் மற்றும் நகர் பகுதிகள் உள்ளிட்ட 10க்கும் அதிக இடங்களில் போலீசார் நேற்று அதிரடியாக களமிறங்கி, பயணிகளை பாதியில் இறக்கிவிட்டு, ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் ஆட்டோக்கள் ரிசர்வ்லைன் கொண்டு செல்லப்பட்டன. பல ஆட்டோக்களின் பெர்மிட்டை போலீசார் ரத்து செய்தும் உத்தரவிட்டனர். இதனால் நகரில் போக்குவரத்திற்கு டீசல் ஷேர் ஆட்டோக்கள் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுவரை அபராதம் மட்டுமே விதித்து வந்த போலீஸ் தற்போது களமிறங்கி, அதிரடியாக நேற்று சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளில் இறங்கியது. இது குறித்து மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம் கூறுகையில், ‘மதுரை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில், 12 ஆயிரத்து 223 ஆட்டோக்கள் மட்டுமே அனுமதி பெற்றுள்ளன.

இதுதவிர, ஷேர் ஆட்டோக்கள் பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. ஆர்டிஐ தகவலுக்கு பிறகே தற்போது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்தோடு விட்டு விடாமல் இதனை முறைப்படுத்துவது அவசியம்’’ என்றார். டீசல் ஆட்டோ சங்க தலைவர் ராஜா கிருஷ்ணன் கூறுகையில், ‘‘நாங்கள் நீண்ட நாட்களாக வைக்கும் கோரிக்கை ஆட்டோவில் ஆட்களை ஏற்றும் 3 பிளஸ் 1ஐ, 5 பிளஸ் 1 ஆக மாற்றித் தாருங்கள் என்பதுதான். இன்சூரன்ஸ் பிரிமியத்தொகையைக் கூட அதிகரித்துக் கொள்ளுங்கள், இந்த தொழிலை ஒழுங்குபடுத்துங்கள். மதுரையில் மட்டும் 18 ஆயிரம் குடும்பங்கள் ஆட்டோ தொழிலில் இருக்கிறோம். குறைந்த கட்டணமாக ரூ.10 வசூலிக்கிறோம். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், இந்த ஆட்டோ தொழிலை முறைப்படுத்தி நாங்கள் பாதிக்காத வகையில் சரிப்படுத்தி தர வேண்டும்’’என்றார்.

Related Stories: