புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை: சுகாதாரத்துறை இயக்குனர் உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதன் பலி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் சீனாவில் இருந்து வந்த புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த மூன்று மருத்துவ மாணவர்களை சோதனை செய்ததாகவும், ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.

Advertising
Advertising

இருந்தாலும் 28 நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்க வேண்டாம், வீட்டிலேயே தனியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக கூறிய அவர், புதுச்சேரி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளை சோதிக்க சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 8 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு கோரிமேடு ஜிப்மர் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 5 படுக்கைகள் கொண்ட தனி பிரிவை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதலால் கொரோனா வைரஸ் குறித்து, பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும், கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் நோய்க்கு தேவையான அனைத்து மருந்துகளும் n95 முக கவசம் பாதுகாப்பு கவசம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Stories: