பொள்ளாச்சியில் இருந்து வரத்து அதிகரித்தும் நெல்லையில் இளநீர் விலை விர்ர்.... ரூ.40 ஆக உயர்ந்தது

நெல்லை: கோடைகாலம் வருவதற்கு முன்பாகவே பொள்ளாச்சியில் இருந்து நெல்லைக்கு இளநீர் வரத்து அதிகரித்தபோதும் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. செவ்விளநீர் ரூ.40 வீதம் விற்கப்படுகிறது. மழை காலம் முடிந்து தற்போது பனிப்ெபாழிவு சீசன் துவங்கியுள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகாலை மற்றும் இரவில் குளிருடன் குளிர்ந்த காற்று வீசியபோதும் நண்பகலில் வெயிலின் தாக்கம் நெல்லை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உச்சி வெயில் நேரத்தில் பயணிப்பவர்கள் வசதிக்காக சாலையோர கரும்புச்சாறு, தென்னை நீராபானம், கேப்பை கூழ், இளநீர் போன்ற கடைகள் அதிகமாக தோன்றி வருகின்றன.

தர்பூசணி வரத்தும் தலைகாட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பச்சை மற்றும் செவ்விளநீர் பொள்ளாச்சி பகுதியில் இருந்து அதிக அளவில் நெல்லைக்கு வந்து இறங்குகின்றன. ஆனால் தற்போதைய நிலவரப்படி கடந்த ஆண்டைவிட ரூ.5 உயர்ந்துள்ளது. பச்சை இளநீர் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆகவும் செவ்விளநீர் ரூ.35ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் இளநீரை ஆர்வமுடன் வாங்கி பருகிச் செல்வது வழக்கம் போல் உள்ளது. இதுகுறித்து இளநீர் வியாபாரிகள் கூறுகையில், ‘‘இளநீர் வரத்து அதிகமாக இருந்தால் கடந்த ஆண்டைப்போல் விலையில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Related Stories: