தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை ஏற்பு வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: சட்ட அமைச்சகம் ஒப்புதல்; விரைவில் சட்ட திருத்தம்

* உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது அவசியமாகும்.

* இதுவரை 38 கோடி வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

* வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதால் போலி வாக்காளர்கள், இரு அட்டைகள் வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்படும்.

* ஆதார் எண் இல்லை என்பதற்காக புதிய வாக்காளர் அட்டை மறுக்கப்படாது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சட்ட அதிகாரம் வழங்க வேண்டுமென்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் முதலில் கடந்த 2015ல் தொடங்கியது. அப்போது, பொது விநியோக முறை, காஸ் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம் ஆகியவற்றுக்கு ஆதார் பயன்பாட்டை உச்ச நீதிமன்றம் தடை செய்ததால், அந்தாண்டு ஆகஸ்டில் இத்திட்டம் கைவிடப்பட்டது. அதுவரை தேர்தல் ஆணையம் 38 கோடி வாக்காளர் அட்டைகளை ஆதாருடன் இணைத்திருந்தது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‘தனிநபர் உரிமை ஒரு அடிப்படை உரிமை என்றாலும், ஆதார் சேகரிப்பதற்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு குறிப்பிட்ட சட்டம் இருந்தால் அதனை நடைமுறைப்படுத்த முடியும்’ என கூறியிருந்தது. இதன்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சட்ட அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது.

இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ‘தெளிவான புதிய வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கு ஏதுவாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சட்ட அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் ஆதார் சட்டம் 2016 ஆகியவற்றில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும்,’ என பரிந்துரைத்திருந்தது. இவ்வாறு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம், ஏற்கனவே வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களிடமோ அல்லது புதியதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோரிடமோ தேர்தல் அலுவலர், ஆதார் எண்ணை கேட்க முடியும். இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் சட்ட அமைச்சகம் பதிலளித்ததாக கூறப்படுகிறது.

அதில், ‘தனிநபர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதால், கொள்கை அளவில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அதேநேரத்தில் அப்படி இணைக்கும் போது தகவல்கள் திருட்டு ஏதும் நடைபெறாமலும், அதனை தடுப்பதற்கான அனைத்து உரிய பாதுகாப்பு அம்சங்களையும் கவனத்துடன் பின்பற்ற வேண்டும்,’ என கூறியிருந்தது. இதற்கு கடந்த டிசம்பர் 12ம் தேதி பதிலளித்த தேர்தல் ஆணையம், ‘ஆதார் தகவல்களை பாதுகாக்க ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  விண்ணப்படிவத்தில் இருந்து, அனைத்து நடைமுறைகளும் இரட்டை பாதுகாப்பு அம்சத்துடன் இருக்கும். தேர்தல் ஆணையம்  ஆதார் ஆகிய இரு அமைப்புகளுக்கு இடையில் பாதுகாப்பு அம்சங்கள் அங்கீகார நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

இரு அமைப்புகளுக்கு இடையே முழுமையாக பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்படும். ஆதார் தகவல்கள் வேறு எந்த நபருக்கும் கிடைக்க, பகிர, பரிமாற்றம், விநியோகம் செய்ய தடை விதிக்கப்படும்,’ என கூறியுள்ளது. மேலும், யாராவது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்காவிட்டால், அவர்களது பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்றும், ஆதார் இல்லாததற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மறுக்கப்படாது என்றும் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் திருத்தத்திற்கான அமைச்சரவையின் ஒப்புதல் பெற அறிக்கை தயார் செய்யும் பணியில் சட்ட அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, விரைவில் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்குமாறு அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: