இந்தியாவின் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது: சர்வதேச நிதிய தலைவர் நம்பிக்கை

டாவோஸ்: ‘இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மந்தநிலை தற்காலிகமானதுதான், அது விரைவில் முன்னேறும்,’ என உலக பொருளாதார அமைப்பு கூட்டத்தில் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிரிஸ்டாலினா ஜியார்ஜிவா கூறினார்.  உலக பொருளாதார அமைப்பின் கூட்டம், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா பேசியதாவது: உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்து கடந்தாண்டு அக்டோபரில் அறிக்கை வெளியிட்டோம். அதனுடன் ஒப்பிடுக்கையில், இந்தாண்டு ஜனவரி மாதம் உலக நாடுகளின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பது போல் தெரிகிறது. இதற்கு அமெரிக்கா-சீனா இடையே நிலவி வந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்தது, வரி குறைப்பு உட்பட சில விஷயங்களே காரணம். உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 3.3 சதவீதமாக இருப்பது மிகச் சிறந்தது அல்ல.

இது இன்னும் மந்தமான வளர்ச்சிதான். நிதிக் கொள்கைகள், சீர்த்திருத்தங்கள் மேலும் தீவிரமாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மிகப் பெரிய சந்தையான இந்தியாவிலும், வளர்ச்சி மந்தமாக இருந்தது. இது தற்காலிகமானது என நம்புகிறோம். இது வரும் காலங்களில் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆப்பிரிக்க நாடுகள் பலவும் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், மெக்சிகோ உள்ளிட்ட சில நாடுகள் சிறப்பாக செயல்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: