எனக்கு என் காதல் முக்கியம்…. ரஷ்ய அதிபர் புடின் முன்பு ‘லவ் புரபோஸ்’ செய்த நிருபர்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின்போது நேரலையில் பத்திரிகையாளர் ஒருவர் தனது காதலிக்கு திருமண வேண்டுகோள் விடுத்த சுவாரஸ்ய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆண்டு இறுதியில் நடத்தும் செய்தியாளர்கள் சந்திப்பு உலக அளவில் மிகவும் பிரபலமானது. நேற்று நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பு சுமார் நான்கரை மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் லவ் புரபோஸ் செய்த சம்பவம் ஒன்று அரங்கேறியது. எகடெரின்பர்க் பகுதியைச் சேர்ந்த கிரில் பஷானோவ் (32) என்ற இளம் பத்திரிகையாளர், கழுத்தில் சிவப்பு நிற ‘போ’ அணிந்து, கையில் ‘நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்ற பதாகையுடன் அமர்ந்திருந்தார்.

இதைக் கவனித்த அதிபர் புடின், அவரது ஆடையைப் பாராட்டியவுடன், அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட நிருபர், கேமரா வழியாக தனது காதலி ஓல்காவிடம், ‘ஓலெக்கா, என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என்று நேரலையில் கேட்டார். இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு மணி நேரத்திற்குள், செய்தி நிறுவனம் மூலம் அப்பெண் சம்மதம் தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் திருமணச் செலவு மற்றும் வாழ்க்கைச் செலவு குறித்து நிருபர் கேட்டபோது, ‘ஆண்கள் தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதால், திருமணத்திற்கு நிதி திரட்ட அரங்கில் உள்ளவர்களிடம் தொப்பியை ஏந்துங்கள்’ என்று புடின் நகைச்சுவையாகக் கூறினார். தனது திருமணத்திற்கு வருமாறு நிருபர் விடுத்த அழைப்பை ஏற்று, அதிபர் புடின் அந்த ஜோடிக்காகக் கைதட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related Stories: