இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு ஊழல் வழக்கில் தலா 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இம்ரான் கான் அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு அரசு முறை பயணத்தின்போது சவுதி அரசிடம் இருந்து பெறப்பட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக இம்ரான் மற்றும் அவர் மனைவி மீது மீது ‘தோஷகானா-2’ வழக்கு தொடரப்பட்டது.
இருவரும் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாகவும், நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ராவல்பிண்டி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீவி ஆகிய இருவருக்கும் பாகிஸ்தான் தண்டனைச் சட்ட பிரிவு 409ன் கீழ் (நம்பிக்கை மோசடி) தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஊழல் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இருவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
