குடியரசு தின விழா பாதுகாப்பு: குமரி ரயில் நிலையங்களில் தீவிர சோதனை...லாட்ஜூகளில் விசாரணை

நாகர்கோவில்: குடியரசு தின விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்களிலும் தீவிர சோதனை நடக்கிறது. குடியரசு தின விழா, நாளை மறுதினம் (26ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு  சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரிடம் நடந்த விசாரணையில் பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் திட்டத்தை செயல்படுத்த இருந்தது  தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூர், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதை  தொடர்ந்து குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில் நடத்தப்பட இருந்த தாக்குதல் திட்டம் அம்பலத்துக்கு வந்தது. தொடர்ந்து பயங்கரவாதிகள் கைது நடவடிக்கை நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களிலும், பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உளவுப்பிரிவு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். அங்குள்ள லாட்ஜூகளில் கடந்த ஒரு வாரமாக சோதனை நடக்கிறது.  சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கி இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர். போதிய முகவரி சான்று இல்லாமல், யாருக்கும் அறைகள் ஒதுக்கீடு செய்ய கூடாது  என எச்சரித்துள்ளனர். இரவு நேரங்களில், கன்னியாகுமரிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். குமரி - கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர பகுதிகளில் கியூ பிராஞ்ச் போலீசார், கடலோர காவல் நிலைய போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரி அருகே  உள்ள கூடங்குளம் கடற்கரை பகுதி வரை, குமரி கடலோர காவல் நிலைய போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி  மீனவர்களை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளங்கள் மற்றும் ரயில்வே பாலங்களில் மோப்ப நாய் மற்றும்  மெட்டல் டிடெக்டர்  உதவியுடன் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்களுக்கு வரும் பார்சல்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும்  ரயில்களில் சோதனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில்களுக்கு வரும் பக்தர்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டம் முழுவதும் நேற்று  இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் போக்குவரத்து விதிகள் மீறியதாக, 940 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்தில் 182, தக்கலை 327, குளச்சல் 323,  கன்னியாகுமரியில் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வந்ததாக 565 பேர் சிக்கினர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: