எலக்ட்ரானிக், பிளாஸ்டிக் கழிவில் இருந்து இலகு ரக டீசல் தயாரிக்க ரயில்வேயில் முதல் ஆலை: கிழக்கு கடற்கரை ரயில்வே சாதனை

புதுடெல்லி: எலக்ட்ரானிக், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை 24 மணி நேரத்தில் இலகு ரக டீசலாக மாற்றும் ஆலையை கிழக்கு கடற்கரை ரயில்வே தொடங்கியுள்ளது. எலக்ட்ரானிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை இலகு ரக டீசலாக மாற்றும் ‘பாலிகிராக்’ தொழில்நுட்பத்துக்கு இந்தியா காப்புரிமை பெற்றுள்ளது. இதன் முதல் ஆலை பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஒரு நாளைக்கு 50 கிலோ கழிவு பொருட்களை மட்டுமே பயன்படுத்தி எரிபொருள் தயாரிக்க முடியும். இதேபோல், டெல்லியில் மோதிபாக் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு, ஹிண்டால்கோ நிறுவனத்தில் கடந்த ஆண்டும் எரிபொருள் ஆலை அமைக்கப்பட்டது.

தற்போது ஒரு நாளைக்கு 500 கிலோ கழிவு பொருட்களை பயன்படுத்தி இலகு ரக டீசலை தயாரிக்கும் மிகப் பெரிய ஆலையை, கிழக்கு கடற்கரை ரயில்வே அமைத்துள்ளது. ரயில்வேயில் இதுபோன்ற ஆலை அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. மான்செஸ்வர் ரயில்வே பணிமனை, புவனேஸ்வர் ரயில் நிலையம் ஆகியவற்றில் சேகரிக்கப்படும் எலக்ட்ரானிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், இந்த எரிபொருள் ஆலைக்கு கொண்டு செல்லப்படும். இந்த கழிவுகள் பல்படி வினையூக்கி முறையில், ஹைட்ரோ கார்பன் திரவ எரிபொருள், வாயு, மற்றும் கார்பன் மற்றும் தண்ணீராக மாற்றப்படும். 24 பணி நேரத்தில் கழிவு பொருள், எரிபொருளாக மாற்றப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 450 டிகிரி வெப்பநிலையில் செயல்படும் இந்த ஆலை, மற்ற முறைகளை ஒப்பிடும் போது குறைந்த வெப்பநிலையில் செயல்படக் கூடியது.

Related Stories: