எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கேரள சாக்கடையில் வீசப்பட்ட துப்பாக்கியை மீட்டது தனிப்படை போலீஸ்

திருவனந்தபுரம்: எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளை போலீசார் கேரளாவிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது சாக்கடையில் வீசப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8ம் தேதி இரவு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரை சுட்டு கொன்றதாக அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள், நீதிமன்ற உத்தரவின்படி 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கப்பட்டதன் பேரில், கடந்த 2, 3 நாட்களாக அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வில்சன் கொலை நடந்ததற்கு முழு திட்டமும் கேரளாவில் நடைபெற்றுள்ளது என கருதப்படுவதால் தீவிரவாதிகள் இருவரையும் தனிப்படை போலீசார் கேரளாவிற்கு அழைத்து சென்றுள்ளார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளா மாநிலம் எர்ணாக்குளம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கழிவுநீர் ஓடையில் எஸ்.ஐ. வில்சனை சுட்டு கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வீசி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று துப்பாக்கி வீசப்பட்ட இடத்தில் தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், துப்பாக்கியும், தோட்டாக்களையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அவர்கள், திட்டம் உருவான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக கேரளா மாநிலம் மெய்யாற்றங்கரை பகுதியில் தான் இதற்கான சதித்திட்டம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் சையது அலி என்பவர் அவர்களுக்கு பெருமளவில் உதவி புரிந்துள்ளார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து கேரளா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்திய பின்னர், கர்நாடகா மாநிலத்திற்கும் அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்த காவல்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: