அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதி காசோலை ‘பவுன்ஸ்’!: பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி..!!

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆலை நிர்வாகம் வழங்கிய இழப்பீட்டு காசோலை பணமின்றி திரும்பியதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. பட்டாசு ஆலை நிவாரணமாக வழங்கிய ரூபாய் 5 லட்சம் காசோலை பணமில்லாமல் திரும்பியதால் பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆலை நிர்வாகம் சார்பாக 5 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பியதால், உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் பட்டாசு ஆலை நிர்வாகம் தங்களை மோசடி செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். பட்டாசு வெடிவிபத்தின் போது, அச்சமயம் பணம் அளிப்பதாக கூறிவிட்டு பிறகு பணம் இல்லை என பட்டாசு ஆலை நிர்வாகம் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக பட்டாசு, தீப்பெட்டி சங்க மாவட்ட செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பட்டாசு ஆலை வெடிவிபத்தால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வேறு தொழிலும் இல்லை. ஆதனால் தொடர்ந்து பட்டாசு ஆலை தொழிலையே பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தங்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்துதர வேண்டும். அல்லது பட்டாசு தொழிலில் விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து தர வேண்டும். மேலும் ஏதேனும் விபத்து ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் சார்பில் அறிவித்தபடி இழப்பீட்டு தொகையினை சரியாக வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. …

The post அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதி காசோலை ‘பவுன்ஸ்’!: பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: