பேரறிவாளன் மனு தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பேரறிவாளன் மனு தொடர்பாக, தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி, நான் வாங்கி கொடுத்தது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் எனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று கோரி இருந்தார். இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த சில வாரங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக சி.பி.ஐ. சிறப்பு குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கை, ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கை போல் உள்ளது. எந்த ஒரு புதிய விஷயமும் தற்போதைய அறிக்கையில் இல்லை’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.

 இந்நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘புதிய நிலை அறிக்கை இன்னும் தாக்கல் செய்யவில்ைல; கால அவகாசம் தேவை’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘இன்னும் எவ்வளவு நாளாகும்?’ என்று கேட்டார். தொடர்ந்து பேரறிவாளன் தரப்பில், ‘சிபிஐ இதுவரை தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக எந்த ஆதாரப்பூர்வமான விவரத்தையும் தெரிவிக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், ‘‘பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? சிபிஐ புதிய அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கூறினர்.

Related Stories: