காணும் பொங்கலை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஊட்டி : காணும் பொங்கலையொட்டி ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள் மற்றும் காய்கறிகளை சூரிய பகவானுக்கு படைத்து வழிப்பட்டனர். அதேபோல், மாட்டுப் பொங்கல் தினத்தன்று வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் மற்றும் கால்நடைகளை அலங்காரம் செய்தும், அவைகளுக்கு வர்ணம் பூசியும் அழகு செய்து பூஜைகள் செய்தனர்.

நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலன்று பெரும்பாலான மக்கள் உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரை, கடற்கரை போன்ற பகுதிகளுக்கு செல்வது வழக்கம். சமவெளிப் பகுதிகளை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் நேற்று காணும் பொங்கலை கொண்டாட ஊட்டிக்கு வந்து குவிந்தனர். குறிப்பாக, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் குவிந்தனர்.

இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இது தவிர ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இவர்கள், சுற்றுலா தலங்களில் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடியும், ஆடி, பாடியும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, கமர்சியல் சாலை ஆகியவை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டன. மேலும், தொட்டபெட்டா செல்லும் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

அதேபோல், பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம் மற்றும் பைக்காரா நீர் வீழ்ச்சி போன்ற சுற்றுலா தலங்களிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.  பொங்கல் விடுமுறை மற்றும் வார விடுமுறை என கடந்த 3 நாட்களாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் முகாமிட்டுள்ளனர். இன்னும் இரு நாட்கள் விடுமுறை உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாததால் ஊட்டியில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Related Stories: