சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள்

ஊட்டி : ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அங்காங்கே சிறு, சிறு மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இது தவிர தொடர் விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக, கோடை கோலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் மே மாதம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சியும், கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதம் நடக்கும் கோடை விழாவிற்காக தற்போது இந்த பூங்காக்கள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தாவரவியல் பூங்காவில் கடந்த மாதம் இறுதி முதல் நாற்று நடவு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளிலும் நடவு பணிகள் நடந்து வருகிறது.

இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு கண்ணாடி மாளிகையில் அலங்கார தாவரங்கள் மற்றும் ஒரு சில மலர் செடிகளை வைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பூங்காவில் ஆங்காங்கே பல்வேறு வடிவங்களில் செல்பி ஸ்பாட்டுகள் போன்ற மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், மலர்கள் குறைந்தளவு உள்ள போதிலும் அலங்கார செடிகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  

போதிய மலர்கள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள் இந்த சிறு சிறு மலர் அலங்காரங்களை கண்டு மகிழ்வதோடு மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். அதேசமயம், ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, காட்டேரி மற்றும் சிம்ஸ் பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மலர்களை காண முடியாத நிலையில் ஏமாற்றத்துடனே திரும்புகின்றனர். இனி ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் தான் அனைத்து பூங்காக்களிலும் மலர்களை காண முடியும். அதுவரை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை காண வாய்ப்பில்லை.

Related Stories: