அதிகாரத்தை வரையறுத்தது உச்ச நீதிமன்றம் ஐதராபாத் என்கவுன்டர் போலி என தெரிந்தால் அதற்கு யார் காரணம் என்பதை கூற வேண்டும்: விசாரணை ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘ஐதராபாத் என்கவுன்டர் சம்பவம் குறித்து விசாரணையில், குற்றம் நடந்திருப்பது தெரிய வந்தால், தவறுக்கு பொறுப்பான அதிகாரிகள் யார் என்பதை குறிப்பிட வேண்டும்,’ என விசாரணை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் திஷாவை 4 பேர் கும்பல் பலாத்கார கொலை செய்து, அவரது உடலை எரித்தது. இது தொடர்பாக முகமது ஆரிப், சென்னா கேசவலு, ஜொலு சிவா, நவீன் ஆகிய 4 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். இவர்களை கடந்த மாதம் 6ம் தேதி காலை, சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவத்தை நடித்து காட்டும்படி போலீசார் கூறினர். அப்போது இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெலங்கான போலீசார் தெரிவித்தனர்.

இது போலி என்கவுன்டர் சம்பவம் என உச்சநீதிமன்றத்தில் இரு மனுக்களை வக்கீல்கள் தாக்கல் செய்து, இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதில் மும்ைப உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரேகா பல்தோத்தா, சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆணைய உறுப்பினர்களின் அதிகாரம், அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு விதிமுறைகளை வகுத்துள்ளது. இது தொடர்பாக இந்த அமர்வு நேற்று  கூறியிருப்பதாவது: போலீஸ் பாதுகாப்பில், குற்றவாளிகள் இருந்தபோது என்கவுன்டர் சம்பவம் நடந்துள்ளது. எந்த சூழ்நிலையில் என்கவுன்டர் எப்படி நடந்தது என்பதை விசாரிக்க வேண்டும். இந்த என்கவுன்டர் விசாரணையின் போது, ஏதாவது குற்றம் நடந்திருப்பது தெரியவந்தால், தவறுக்கு பொறுப்பான  அதிகாரிகள் யார் என்பதை குறிப்பிட வேண்டும்.

இந்த ஆணைய தலைவருக்கு ஒவ்வொரு விசாரணையின் போதும் ரூ.1.5 லட்சம் ஊதியம் வழங்க வேண்டும். மற்ற உறுப்பினர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். ஆணைய உறுப்பினர்களுக்கு சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை ஆணைய சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் அணைத்தும் இந்த ஆணையத்துக்கு உள்ளது. இந்த குழு ஐதராபாத்தில் விசாரணை அமர்ந்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஆணையத்துக்கான செலவு முழுவதையும் தெலங்கானா அரசு ஏற்க வேண்டும். விசாரணை ஆணையத்துக்கு தேவையான உதவிகளை தெலங்கானா அரசு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த உத்தரவு உச்சநீதிமன்ற வெப்சைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: