பந்து வீச்சில் தலையில் அடிபட்டு அதிர்வு ‘கன்கஷன்’ முறையில் ரிஷப் வெளியேற்றம்: நாளைய 2வது போட்டியில் பங்கேற்கவில்லை

மும்பை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிஷப் பண்ட், 33 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இவர் பேட்டிங் செய்யும் போது, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய பந்து பண்ட்-ன் ஹெல்மெட்டில் அடித்தது. இதனால் அவர் லேசான காயம் அடைந்தார்.

 இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும் போது, ரிஷப் பண்ட் கீப்பிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கீப்பிங் செய்தார். ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ராஜ்கோட்டில் நாளை நடக்கும் 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மூளையில் அதிர்வு ஏற்பட்டிருப்பதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு பிறகு, அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பாரா? அல்லது மாட்டாரா? என்பது அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் பண்ட் விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மணிஷ் பாண்டே அல்லது கேதர் ஜாதவ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றே தெரிகிறது. ‘கன்கஷன்’ முறையை (‘கன்கஷன்’ (அதிர்ச்சியால் நினைவு இழப்பு) மாற்று வீரர் என்னும் விதியின்படி ஒரு வீரர் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்னைகளால் விளையாட முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக வரும் மாற்று வீரர், பேட்டிங் , பவுலிங் என இரண்டையும் மேற்கொள்ளலாம்) ஐசிசி அறிமுகப்படுத்திய பிறகு, இதன் காரணமாக ஒரு இந்திய வீரர் ஆட்டத்தில் இருந்து விலகுவது இதுவே முதன்முறையாகும்.

Related Stories: