மீறினால் ஓராண்டு சிறை, அபராதம் அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் நகைகளில் ஹால்மார்க் கட்டாயம்: ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல், ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று கூறியதாவது: அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் நகைகளை ஹால்மார்க் முத்திரையுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதற்காக இந்திய தர நிர்ணய அமைவனத்தில் வர்த்தகர்கள் பதிவு செய்து கொள்ள ஓராண்டு அவகாசம் அளிக்கப்படுகிறது. ஹால்மார்க் கட்டாய நடைமுறை தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு நுகர்வோர் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்படும். அதன்பிறகு ஹால்மார்க் முத்திரையுடன் 14, 18 மற்றும் 22 காரட் நகைகளை மட்டுமே விற்க முடியும். மீறினால், ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

ஹால்மார்க் முத்திரை மற்றும் மதிப்பீடு மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் இலக்கு என தெரிவித்தார். இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு நகை வாங்குபவர்கள் பிஐஎஸ் ஹால்மார்க் தர முத்திரை, காரட் அளவு, மதிப்பீடு மையத்தின் பெயர் மற்றும் ஜூவல்லரி முத்திரை இருக்கிறதா பார்த்து வாங்க வேண்டும். தற்போது நாடு முழுவதும் 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளன சுமார் 28,849 நகைக்கடைகள் இதில் பதிவு செய்துள்ளன. விதிகளை மீறினால் ஒரு லட்சம் ரூபாய் முதல் நகை மதிப்பில் 5 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என பிஐஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறக்குமதி வெங்காயத்தை வாங்க யாரும் முன்வரவில்லை

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி மற்றும் காரீப் பருவ வரத்து காரணமாக வெங்காயம் விலை குறைய தொடங்கியுள்ளது. இதுவரை மத்திய அரசு 36 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தமிட்டுள்ளது. இதில் 18,500 டன் வெங்காயம் இறக்குமதியாகிவிட்டது. ஆனால் 2,000 டன் வெங்காயம் வரை மட்டுமே மாநிலங்களால் வாங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலால் மத்திய அரசு வேதனை அடைந்துள்ளது. இதனை காரணமாக வைத்து யாராவது மத்திய அரசு அழுகிய வெங்காயத்தை விற்பனை செய்கிறது எனக்கூறி நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது என ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

Related Stories: