மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியை தொடர்ந்து பெங்களூரு கூட்டுறவு வங்கியும் திவால்?: பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் முற்றுகை

பெங்களூரு: பெங்களூருவில் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதாக ரிசர்வ் வங்கியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் நேற்றும்  வங்கி கிளைகளை முற்றுகையிட்டனர். பெங்களூரு  பசவனகுடியில் குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் இயங்கி  வருகிறது. நகரில் 7 இடங்களில் கிளை வங்கிகள் இயங்கி வருகிறது.  இதில் 35 ஆயிரம் பேர் ₹1600 கோடி முதலீடு வைத்துள்ளனர். பலருக்கும் இதுவரை 1500 கோடிக்கும் அதிகமாக கடன் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் 62 பேருக்கு அளிக்கப்பட்ட மொத்தம் 300 கோடி ரூபாய் பல மாதங்களாக வராக்கடனாக உள்ளது. இதை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து, வங்கியின் செயல்பாடுகளை முடக்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக  ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் அதிக அளவில் வங்கியை முற்றுகையிட்டு வருகிறார்கள்.  35 ஆயிரம் வரை மட்டும் பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆர்பிஐ  கூறியுள்ளதால், நேற்று அதிகாலை 4 மணி முதலே ஏடிஎம் மையங்களில்  வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கினர். பொங்கல் பண்டிகை சமயத்தில் பணம்  எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ளது முதலீட்டாளர்களை கடும்  அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. வங்கி திவாலாகி விட்டதால் ஆர்பிஐ இப்படி  நடவடிக்கை எடுத்துள்ளதோ என்ற சந்ேதகமும் முதலீட்டாளர்கள் மற்றும்  வாடிக்கையாளர்களுக்கு பீதி ஏற்பட்டது.

ஆர்பிஐ  நடவடிக்கை தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்க வங்கி அதிகாரிகள்  முயன்றனர். ஆனால், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும், வாடிக்கையாளர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், பிரச்னை ஏற்படலாம் என்று கருதி கூட்டத்தை ரத்து செய்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முதலீட்டாளர்கள்  வங்கியை முற்றுகையிட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. அப்போது கூடியிருந்த முதலீட்டாளர்களிடம் வங்கியின் இயக்குனரும், கர்நாடக சட்ட மேலவை  உறுப்பினருமான ரமேஷ்பாபு பேசும்போது, ‘‘ஆர்பிஐ என்ன நோக்கத்திற்காக  முதலீட்டாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ளது என்று தெரியவில்லை.  நமது வங்கி திவாலாகி விட்டதாக சிலர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.  அப்படி எதுவும் நடக்கவில்லை. கடனில் 350 கோடி பாக்கி  உள்ளது. அதை மார்ச் இறுதிக்குள் வசூல் செய்ய நடவடிக்கை  எடுக்கப்படும். முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்க  20ம் தேதி பெங்களூரு அரண்மனை  மைதானத்தில் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்றார். ஏற்கனவே மகாராஷ் டிராவில் உள்ள பஞ்சாப் மற்றும்  மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மீது ஆர்பிஐ இதுபோன்ற நடவடிக்கை  எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி தடை ஏன்?

* வங்கியில் 35 ஆயிரம் பேரின் 1600 கோடி ரூபாய் டெபாசிட் பணம் உள்ளது.

* பல கோடிகளில் 62 பேருக்கு கடன் அளிக்கப்பட்டுள்ளது.

* இந்த வகையில் 300 கோடி ரூபாய் வரை வராக்கடனாக நிலுவையில் உள்ளது.

* இதனால் வங்கி தொடர்ந்து பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

* சில மாதங்களில் வராக்கடனை வசூலித்த பின் வங்கியை மீண்டும் முழு அளவில் நடத்த உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

* பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியை  தொடர்ந்து இந்த கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை போட்டுள்ளது.

* முதலீட்டாளர்களின் வங்கிக்கணக்கில் எவ்வளவு இருப்பு இருந்தாலும் 35 ஆயிரம் தான் இப்போதைக்கு எடுக்கலாம் என்று வரம்பு விதித்துள்ளது ஆர்பிஐ.

விதிமுறைப்படி செயல்படவில்லை

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கி  ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி செயல்படவில்ைல. இதேபோன்று மகாராஷ்டிரா,  பஞ்சாப் கூட்டுறவு வங்கிகளும் விதிமுறைப்படி செயல்படவில்லை. எனவே  வாடிக்கையாளர்கள் 35 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க வேண்டும் என்று  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 50க்கும்  மேற்பட்டவர்களிடமிருந்து 360 கோடி கடன் வசூல் நிலுவையில் உள்ளது. அந்த  தொகையை மார்ச் 31ம் தேதிக்குள் வசூலித்து விடுவதாக வங்கி நிர்வாகம் உறுதி  அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றனர்.

தடை போட்டது சரியல்ல

‘வராக்கடனாக உள்ள 300 கோடியை வசூலித்து விடுவோம் என்று வங்கி தரப்பில் கூறப்படுகிறது. மேலும், 0.5 சதவீதம் தான் வராக்கடன்  அளவாக உள்ளது. இந்த அளவுக்கே ரிசர்வ் வங்கி தடை போட்டது ஏன்? எங்கள் பணம் ஐந்து மடங்கு உள்ளதே? உண்மையான காரணத்தை மறைத்து வங்கியை முடக்குவது சரியல்ல; எங்களின் பணத்தை தராமல் வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என்று முதலீட்டாளர்கள்  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: