மனஅழுத்தம் போக்க ஊழியர்களுக்கு இனி 5 நிமிட யோகா: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: அரசு அலுவலகங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு அலுவல் நேரத்தில் 5 நிமிடங்கள் இடைவேளை கொடுத்து யோகா பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா பயிற்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. யோகா துறையில் பிரபலமான பல நிபுணர்களின் யோசனைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டம் ஒய்-பிரேக் என்ற பெயரில் மத்திய அரசின் ஆயுஷ் மைச்சகத்தால் கடந்த திங்களன்று சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த யோகா நிகழ்ச்சி திட்டத்தில் டாடா கெமிக்கல்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்பட பிரபலமான 15 பெரிய நிறுவனங்கள் தாமாக முன்வந்து கலந்து கொண்டுள்ளன. அலுவலக நேரத்தில் 5 நிமிடங்கள் இடைவேளை விடப்பட்டு யோகா பயிற்சி தரப்படுகிறது. கடினமாக இல்லாமல் எளிதாக இருக்கும் வகையில் பயிற்சி தரப்படுகிறது. இதனால், பணி சுமை காரணமாக மனஅழுத்தத்துடன் இருக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மன அழுத்தம் குறைந்தும், புத்துணர்ச்சி பெற்றும் மீண்டும் பணியைத் தொடர முடியும் என்று கருத்தப்படுகிறது.

இதற்கு முன்பு, ஆயுஷ் அமைச்சகம், அரசு அலுவலகங்களிலும் பெரிய நிறுவனங்களிலும் 30 நிமிடங்கள் இடைவேளை விட்டு யோகா பயிற்சி அளிக்க யோசனை தெரிவித்து இருந்தது. ஊழியர்களுக்கு அலுவல் நேரத்தில் சிறிது நேரம் யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை அமல்படுத்துமாறு பெடரேஷன் ஆப் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்புக்கும் (எப்ஐசிசிஐ) பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. யோகா பயிற்சி என்பது பாடத்திட்டம் போல் நடத்தாமல் புத்துணர்ச்சி பெறவும் மனஅழுத்தம் குறையும் வகையிலும் எளிதாக இருக்கும் வகையில் பயிற்சி இருக்கும். இதற்காக துண்டு பிரசுரங்கள் மற்றும் காணொலி காட்சிகள் ஆகியவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதான நோக்கம் தொழில் திறன் மேம்பட வேண்டும் என்பதுதான் என்று ஆயுஷ் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: