கோடை காலத்தில் மின் தேவை கூடுதல் மின்சாரம் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை,: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று டெல்லியில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்து மாநிலத்திற்கு தேவையான சில கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்று (நேற்று) காலை மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது தமிழகத்திற்கு கோடைகாலத்தின் போது பயன்பாட்டிற்காக மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால் 4 ஆயிரம்தான் தற்போது வந்து கொண்டு இருக்கிறது. அதனால் குறிப்பிட்டபடி கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மாநிலத்தில் புதிய திட்டங்களுக்கு தேவையான மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். குறிப்பாக, தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தற்போது உள்ளது. மேலும் உடன்குடி, எண்ணூர் உட்பட பல்வேறு புதிய திட்டங்களுக்கு தேவையான தொகையை விடுவிக்கவும், புதிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்த 1,200 கோடி நிதி உதவி தர வேண்டும் என கேட்டுள்ளோம். மத்திய ரயில்வேத்துறை அமைச்சரையும் சந்தித்து தமிழகத்திற்கு அதிகப்படியான நிலக்கரி ரேக்குகளை அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் மின்சார ஊழியர்கள் தேர்வின்போது வயது வரம்பை நீட்டிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் எப்படி தெரிவித்தார் என்பது புரியவில்லை. ஏனெனில் சட்டம் ஒழுங்கில் நாட்டிலேயே தமிழகம்தான் முதல்மாநிலமாக இருக்கிறது என்று மத்திய அரசே விருது வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார்.

Related Stories: