சபரிமலையில் பெண்கள் தரிசன வழக்கு உச்சநீதிமன்றம் 3 வாரம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் அடுத்து மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வரராவ், எம்.எம்.சந்தான கவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தாமாக முன்வந்து கூறியதாவது:

சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை நாங்கள் விசாரிக்க போவதில்லை. மாறாக இந்த விவகாரத்தில் முந்தைய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு எழுப்பிய 7 கேள்விகளை மட்டும்தான் விரிவாக விசாரிக்க உள்ளோம். குறிப்பாக, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மசூதிக்குள் சென்று வழிபாடு நடத்துவது குறித்து விசாரிக்கப்படும். மேலும், அரசியலமைப்பு சட்டம் 25 மற்றும் 26 பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ள மத ரீதியான உரிமைகள் மற்றும் இவை அனைத்தும் மத நம்பிக்கைக்கு உட்பட்டதா? ஒரு மதத்தின் வழிபாடு மற்றும் சடங்கு முறைகளை அந்த மதத்தின் தலைவராக இருப்பவரால் மட்டுமே தீர்மானிக்க முடியுமா?

இது அரசியல் சாசன அமைப்பு சட்டப்பிரிவு 25(2) (பி)யின் படி இந்து மத பிரிவுகள் என தெரிவிக்கப்பட்டதன் முழு அர்த்தம் என்ன, ஒரு மதத்தின் நம்பிக்கை என்பது சட்டம் 26வது பிரிவின் அடிப்படையில் பாதுகாப்பு வரம்புக்குள் வருமா, இவை அனைத்தையும் கோரிக்கையாக வைத்து எந்த எல்லை வரை வழக்காக தொடர்ந்து அதற்கான கேள்விகளை எழுப்ப முடியும் ஆகியவை குறித்து தான் விசாரிக்க உள்ளோம். இந்த வழக்கில் எத்தனை வழக்கறிஞர்கள் வாதிட உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் வரும் 17ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு அடுத்த 3 வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: