விஐபி.க்கள் பாதுகாப்பு பணி என்எஸ்ஜி முற்றிலும் வாபஸ்: மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: விஐபி.க்களின் பாதுகாப்பு பணியிலிருந்து தேசிய பாதுகாப்பு படையினரை (என்எஸ்ஜி) முற்றிலும் வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தீவிரவாத ஒழிப்பு, விமான கடத்தல் தடுப்பு பணிகளுக்காக, ‘தேசிய பாதுகாப்பு படை’ என்ற அதிரடிப்படை கடந்த 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், 450 கமாண்டோக்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்த படையினர், ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பிரிவில் உள்ள 13 விஐபி.க்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். எந்த நோக்கத்துக்காக இந்த படை உருவாக்கப்பட்டதோ, அந்தப் பணியில் இவர்கள் ஈடுபடவில்லை. சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி, காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி மற்றும் அவரது பிள்ளைகள் ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்குப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி, முலாயம் சிங் யாதவ், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் சிங் பாதல், பரூக் அப்துல்லா, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனேவால் மற்றும் பா.ஜ மூத்த தலைவர் அத்வானி ஆகியோரும் தற்போது எஸ்பிஜி பாதுகாப்பில் உள்ளனர்.  இவர்களுக்கு விரைவில் என்எஸ்ஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு, சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. தீவிரவாத தடுப்பு, விமான கடத்தல் தடுப்பு பணிகளுக்கு மட்டுமே என்எஸ்ஜி.யை பயன்படுத்தவும், அவர்களின் பயிற்சியை மேம்படுத்தவும் மத்திய உள்துறை முடிவு செய்துள்ளது. மும்பையில் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது, அவற்றை முறியடிக்க என்எஸ்ஜி கமாண்டோக்கள் 400 பேர் 3 நாட்களாக ஈடுபட்டனர். என்எஸ்ஜி படையில் சிறந்த கமாண்டோக்கள் தேவைப்படுகின்றனர்.

பலரை மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என மூத்த அதிகாரி தெரிவித்தார். மோடி அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஐபி.க்களின் பாதுகாப்பு பற்றி மறுபரிசீலனை செய்தது. இதில் 350 அரசியல்வாதிகள், முன்னாள் மற்றும் தற்போதைய மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு அகற்றப்பட்டது. இதனால். 1,300 கமாண்டோக்கள்  பாதுகாப்பு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.  சிக்கலான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு தங்களை தயார்படுத்தும் பணியில் மட்டுமே இனி இவர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

Related Stories: