தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: லட்சக்கணக்கானோர் விண்ணப்பம்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பங்களை அளித்தனர். 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.முதல் கட்டமாக கடந்த 4ம் தேதி மற்றும் 5ம் தேதி நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு முகாமில் 7 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர். இதன்படி பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய என மொத்தம் 8,39,087 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பெயர் சேர்க்க 6,97,668 பேரும், நீக்கம் செய்ய 36,704 பேரும், திருத்தம் செய்ய 58,828 பேரும், முகவரி மாற்றம் செய்ய 45,887 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். குறிப்பாக 4ம் தேதி நடந்த முகாமில் 3,10,047 விண்ணப்பங்களும், 5ம் தேதி நடைபெற்ற முகாமில் 5,29,040 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது.

இதேபோன்று 2ம் கட்டமாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும்  சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் வாய்ப்பை தவற விட்டவர்கள் வருகிற 22ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் விண்ணப்பம் அளிக்கலாம். www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளித்தவர்களின் மனுக்கள் வீடு வீடாக சென்று பரிசீலிக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இவர்களுக்கு இந்த மாத இறுதியில் இருந்து பிப்ரவரி மாதத்திற்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். பிபரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: