சிறுபான்மையினர் பக்கம் அதிமுக அரசு: CAA-வால் ஒரு இஸ்லாமியர் பாதித்தாலும் பதவியை தூக்கி எறிவேன்...அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கரும்புக்கடை: சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த மாதம் 11ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் விவாதத்திற்கு பின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, பாகிஸ்தான்,  வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி அகதிகளாக 2014ம் ஆண்டு டிசம்பர் 31 வரை இந்தியாவுக்குள் வந்த  இந்துக்கள், சீக்கியர்கள், புத்திஸ்டுகள், சமணர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்துவ மதத்தை  சார்ந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படமாட்டார்கள். மாறாக, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதே இச்சட்டத்தின் சாரம்சமாகும். இதில் முஸ்லிம்கள் மட்டும் தவிர்க்கப்பட்டனர். இதனால் இந்தச் சட்டத்திற்கு  எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

நாட்டில் முதல் முறையாக மதத்தின் அடிப்படையில்  குடியுரிமை வழங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியதோடு,. இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படையை சிதைப்பதாகும் என்றும் கூறி வருகின்றனர். எனினும், எக்காரணம் கொண்டும்  எதிர்ப்புகளுக்கு அரசு பணியாது. இந்த சட்டத்தை அமல்படுத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்று சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை  அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பாணையை வெளியிட்டது. இதன்படி, குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதற்கான விதிமுறைகள் வகுக்கும் முன்பாகவே  அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், கோவை கரும்புக்கடை பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  சிறப்புரையாற்றினார். அப்போது, குடியுரிமை சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் பாதிப்பு ஏற்படாது. பாதிப்பு ஏற்படும் நிலை உருவானால் அமைச்சர் பதவியில் இருந்து விலகி போராடவும் தயங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும்,  அதிமுக அரசு எப்பொழுதும் சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் கூறினார்.

Related Stories: