கூட்டாளிகள் கைது, வீடுகளில் சோதனை எதிரொலி போலீசுக்கு மிரட்டல் விடுக்க நடந்ததா எஸ்.ஐ. கொலை : பயங்கரவாதிகளின் பிடியில் குமரி?

நாகர்கோவில்: குமரி மாவட்டம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி இருப்பது, காவல்துறைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012-ல் இருந்து இந்து இயக்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் படுகொலை சம்பவங்கள் நடந்தன. இதன் பின்னணியில் பயங்கவாத அமைப்புகள் செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து முக்கிய இந்து மத தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2013 ல் பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஆர்.காந்தியை வெட்டி ெகாலை செய்ய முயற்சி நடந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்துக்கு பின்தான் குமரி மாவட்டத்தில் இருந்து பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த கொலை முயற்சி வழக்கில் முக்கியமாக காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டவர் அப்துல் சமீம். அதுவரை சாதாரணமாக அறியப்பட்டு இருந்த அப்துல் சமீம், பெங்களூர் குண்டு ெவடிப்பு சம்பவம், எம்.ஆர்.காந்தி கொலை முயற்சி வழக்கிற்கு பிறகுதான் காவல்துறையால் உன்னிப்பாக கவனிக்கப்பட தொடங்கினார். அதற்கு முன் தக்கலையில் கொடிகள் அறுப்பு, அலங்கார வளைவுகள் எரிப்பு போன்ற சிறு, சிறு வழக்குகள் இருந்தன.

திருவிதாங்கோட்டிலும் அப்துல் சமீமுக்கு எதிர்ப்பு இருந்தது. இதனால் பெங்களூர், சென்னை, மேற்கு வங்காளம் என்று அடிக்கடி செல்ல தொடங்கியவருக்கு, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. எம்.ஆர். காந்தி கொலை முயற்சி வழக்கில் கோட்டார் மாலிக்தீனார் நகரை சேர்ந்த சையது அலி நவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரும் அப்துல் சமீமுடன் பயங்கரவாத அமைப்பில் தொடர்பு இருந்தவர் என்பது தெரிய வந்தது. எம்.ஆர். காந்தி கொலை முயற்சி சம்பவத்தில், நாகர்கோவில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. அதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், அப்துல் சமீம், சையது அலி நவாஸ் உள்பட அவர்களது கூட்டாளிகள் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தலைமறைவாகினர். இவர்கள் சிறையில் இருந்த கால கட்டங்களில் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பதை போலீசாரும், உளவு பிரிவு போலீசாரும் கண்காணித்து வந்தனர். இதனால் போலீசார் மீதான இவர்களின் ஆத்திரம் அதிகரித்தது. இவர்களின் ரகசிய உரையாடல்களை மோப்பம் பிடித்த  தேசிய புலனாய்வு பிரிவு, சமீபத்தில் தென் மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும், கடல் வழியாக பயங்கரவாதிகள் தமிழகம் மற்றும் கேரளாவில் ஊடுருவி இருப்பதாகவும் எச்சரிக்கை செய்தது.

இதையடுத்து போலீசார் இவர்களை தேட தொடங்கினர். கடந்த வாரம் தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் பெங்களூரில், 3 பேரை கைது செய்தனர். இதனால் காவல்துறை மீதான கோபம்  மீண்டும் அதிகரித்தது. இதற்கு பழிக்கு பழி வாங்க வேண்டும். மத்திய, மாநில அரசுக்கு ஓர் எச்சரிக்கை விட வேண்டும் என்ற நோக்கத்தில், களியக்காவிளையில்  எஸ்.ஐ. வில்சனை கொலை செய்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கொலையில் குறைந்தபட்சம் 7 ல் இருந்து 10 பேர் வரை தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் மேலும் சிலர் இவர்களின் கூட்டாளிகளாக உள்ளார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20 பேரிடம் சந்தேகத்தின்பேரில் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட இந்தியாவில் துப்பாக்கியால் சுட பயிற்சி

இன்ஸ்பெக்டரை கொன்ற தீவிரவாதிகள் ஆயுதங்களை கையாள வட இந்தியாவில் பயிற்சி பெற்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.  சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மீது துப்பாக்கி சூட்டை நடத்திய தவுபிக், முகம்மது சமீம் ஆகியோர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாள நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சரியாக குறிபார்த்து சுடுகின்ற அளவுக்கு பயிற்சி பெற்றவர்களாக இருந்துள்ளனர். வட இந்திய பகுதிகளில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளாக இவர்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொலை செய்ய பயன்படுத்தியது நவீன துப்பாக்கியாக இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 7.62 மி.மீட்டர் தடிமன் உள்ள குண்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு துப்பாக்கிகளில் இருந்து வரும் சப்த அளவே களியக்காவிளையில் நடந்த துப்பாக்கி சூட்டின்போது வந்தது என்று அருகே இருந்து கேட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரில் பார்த்த 2 சாட்சிகள்

களியக்காவிளையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில்  நேரில் கண்ட இரண்டு பேர் போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளனர். இதில் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி ஆவார். மற்றொருவர் அருகே உள்ள மாணவர் ஆவார். இருவரது பெயர், விபரங்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதரவாளர்கள் தலைமறைவு

குமரி - கேரள எல்லை பகுதியில் களியக்காவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில்  தீவிரவாத ஆதரவு குழுக்கள் செயல்படுவதாக உளவு பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர். தீவிரவாத தொடர்பு உள்ளவர்கள் என்று தெரியவந்த நிலையில் களியக்காவிளை அருகே உள்ள ஐங்காமம், புன்னக்காவிளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை இரண்டு நாட்களுக்கு முன்னதாக தமிழக கியூ பிரிவு போலீசார் வீட்டிற்கு தேடிச்சென்றிருந்தனர்.

இதுதொடர்பாக அந்த பகுதியில் விசாரணையும் மேற்கொண்டிருந்தனர். அடுத்த நாள் அவரை கைது செய்ய திட்டமிட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை போன்று திருவனந்தபுரம், விதுரை பகுதியிலும் உள்ள ஒருவரை பற்றியும், நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒருவரை பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்ட தகவலும் வெளியாகி இருந்தது. இவர்கள் தவுபிக், முகம்மது சமீம் ஆகியோருக்கு உதவியிருக்கலாம் என்ற நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதேபோல் நெல்லை பேட்டையை சேர்ந்த வாகன சீட் தைக்கும் தொழிலாளி அல்கபீர்(28) குமரி போலீசார் சோதனை நடத்தியதும் திடீரென தலைமறைவாகிவிட்டார்.

Related Stories: