ஜேஎன்யூ.வில் தாக்குதல் சந்தேக நபர்கள் 9 பேரின் புகைப்படங்கள் வெளியீடு: மாணவர் சங்க தலைவர் மீதும் சந்தேகம்

புதுடெல்லி: டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 பேர்களின் புகைப்படங்களை டெல்லி போலீசார் நேற்று வெளியிட்டனர்.   டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்  (ஜேஎன்யூ) கடந்த 5ம் தேதி முகமூடி அணிந்த மர்ம கும்பல் மாணவர்கள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், பல்கலை. மாணவர் சங்க தலைவர் ஆஷி கோஷ் உட்பட பலர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 9 பேரின் புகைப்படங்களை டெல்லி போலீசார் நேற்று வெளியிட்டனர். இது பற்றி குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜாய் டிர்கே கூறுகையில், “பல்கலைக் கழகத்தில் பெரும்பான்மை மாணவர்கள் செமஸ்டருக்காக ஜனவரி 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பதிவு செய்ய விரும்பி உள்ளனர். ஆனால், இடதுசாரியை சேர்ந்த மாணவர் அமைப்புகள் அவர்களை அனுமதிக்கவில்லை.

இதன் காரணமாக 5ம் தேதி பல்கலைக் கழகத்தில் பெரியார் விடுதியில் உள்ள குறிப்பிட்ட சில அறைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிகப்படும் 9 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மாணவர் சங்க தலைவர் ஆஷி கோசுக்கும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது,” என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஷி கோஷ், ‘‘எனக்கு எதிராக எந்த ஆதாரம் இருந்தாலும் டெல்லி காவல்துறை பகிரங்கமாக வெளியிட வேண்டும்,’’ என்றார்.

Related Stories: