தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் பல மாநிலங்களில் பாதிப்பு : வங்கிச் சேவை, போக்குவரத்து முடங்கியது

புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 10 தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தத்தால் வங்கிச் சேவை, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் அவதிப்பட்டனர். மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், தொழிலாளர் சட்ட சீர்த்திருத்தங்கள், முதலீடுகளை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக கடந்தாண்டு செப்டம்பரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் நேற்று நடந்தது. இதில், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு, எல்பிஎப், யுடியுசி ஆகிய 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இதில், நாடு முழுவதும் 25 கோடி பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு போன்றவையும் பங்கேற்றன. ரிசர்வ் வங்கி,  காப்பீட்டு நிறுவன ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இதனால், பொதுத்துறை வங்கிகளில் பணம் பெறுதல், பணம் செலுத்தும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், மக்கள் அவதிப்பட்டனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருந்தன. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் போராட்டம் வெற்றி பெற்றது. பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் போராட்டத்தால் போக்குவரத்து மற்றும் இதர அரசுப் பணிகளில் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. பள்ளி, கல்லூரிகள், போக்குவரத்துகள் வழக்கம் போல் செயல்பட்டன. அசாமில் போராட்டம் முழு வெற்றி பெற்றது. கடைகள், சந்தைகள் மூடப்பட்டிருந்தன, பள்ளிகளும் இயங்கவில்லை. தனியார் நிறுவனங்கள், அரசு போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளை இயக்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கர்நாடகாவில் அரசு  பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ரயில் போக்குவரத்தும் பாதிக்கவில்லை. குடகு மாவட்டம், மடிகேரி நகரத்தில் கர்நாடக அரசு பஸ்கள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. ஆந்திராவில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் செய்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.  தெலங்கானாவில் ஸ்டேட் பேங்க் தவிர மற்ற வங்கிகளின் சேவை பெருமளவு பாதிக்கப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டத்தால் சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராகுல் காந்தி ஆதரவு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத அரசான மோடி அரசு, நாட்டில் பெருமளவு வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை வலுவிலக்க செய்து, அதை தனது நண்பர்களுக்கு பிரதமர் மோடி விற்பனை செய்து வருகிறார். இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள 25 கோடி ஊழியர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என கூறியுள்ளார்.

Related Stories: