பெல் உட்பட 6 பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பாரத் மிகு மின் நிறுவனம் (பெல்) உள்பட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

* உலக அளவில் ஆயுர்வேதம் குறித்து அறிவு  அதிகரித்து வருகிறது. ஆயுர்வேதத்தின் பிறப்பிடமான இந்தியாவை உலகமே  உன்னிப்பாக கவனித்து வருகிறது.

குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத நிறுவனம்,  ஆயுர்வேதத்தில் சர்வதேச தரத்திலான கல்வி, பயிற்சியை வழங்கி  வருகிறது. ஜாம்நகர் குஜராத் ஆயுர்வேத பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தேசிய அந்தஸ்து வழங்க, அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

* கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்த பில்கேட்ஸ், மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள், இந்திய சுகாதாரம், குடும்ப நலத்துறையிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தரமான குடும்பக் கட்டுப்பாட்டு முறையை அதிகரிப்பதும், ஆரம்ப சுகாதாரத்தின் தரத்தை உறுதி செய்வதுமே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்.

மேலும், கர்ப்பகால பெண்கள், புதிதாக பிறந்த குழந்தைகளின் நோய் மற்றும் இறப்பை குறைப்பது, இது தவிர குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரித்தல், ஆரம்ப நிலை சுகாதாரத்தை அதிகரிப்பதும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக திட்ட நடவடிக்கை குழு ஒன்றும் அமைக்கப்படும்.

* பாரத மிகு மின் நிலையம் (பெல்), உலோகங்கள் மற்றும் கனிம வர்த்தக கழகம் (எம்எம்டிசி), தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம், ஒடிசா சுரங்கக் கழகம், ஒடிசா தொழிற்சாலை வளர்ச்சி மற்றும் முதலீட்டுக் கழகம், உலோகங்கள் மற்றும் பொறியியல் ஆலோசனை கழகம் (மெக்கான்) ஆகிய 6 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  

* இந்திய ரயில்வேயின் எரிபொருள் திறனை தன்னிறைவு அடைய செய்வதற்காக கடந்த ஆண்டு டிசம்பரில் இங்கிலாந்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: