நியூசிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

சிட்னி: நியூசிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில் 279 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 454 ரன் குவித்தது. லாபுஷேன் 215, ஸ்மித் 63 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 251 ரன்னுக்கு சுருண்டது.  இதைத் தொடர்ந்து 203 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. அணி 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்திருந்தது. வார்னர் 23, பர்ன்ஸ் 16 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தது. பர்ன்ஸ் 40 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வார்னருடன் மார்னஸ் லாபுஷேன் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்தனர். லாபுஷேன் அரை சதம் அடிக்க, வார்னர் சதம் விளாசி அசத்தினார். லாபுஷேன் 59 ரன் எடுத்து ஹென்றி பந்துவீச்சல் லாதம் வசம் பிடிபட்டார்.

ஆஸ்திரேலியா 52 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வார்னர் 111 ரன்னுடன் (159 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 416 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. லாதம், பிளண்டெல் இருவரும் துரத்தலை தொடங்கினர். பிளெண்டல் 2, லாதம் 1 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் வெளியேற நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த ராவல் 12, பிலிப்ஸ் 0, டெய்லர் 22 ரன்னில் பெவிலியன் திரும்பினர். வாட்லிங் ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நிற்க, அதிரடியாக விளையாடிய கிராண்ட்ஹோம் 52 ரன் (68 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி லயன் சுழலில் பர்ன்ஸ் வசம் பிடிபட்டார். டாட் ஆஸ்டில் 17, சாமர்வில்லி 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். இரண்டரை மணி நேரம் கட்டை போட்ட வாட்லிங் 19 ரன் எடுத்து (108 பந்து) லயன் சுழலில் கம்மின்ஸ் வசம் பிடிபட, நியூசி. அணி 136 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (47.5 ஓவர்). வேக்னர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் நாதன் லயன் 5, ஸ்டார்க் 3, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். லயன் 2 இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆஸி. அணி 279 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

லாபுஷேன் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.  ஆஸி. அணிக்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 40 புள்ளிகள் கிடைத்தன.

Related Stories: