உபி.யை போல் ராஜஸ்தானிலும் பரிதாபம் அரசு மருத்துவமனையில் 100 பச்சிளம் குழந்தை பலி: பிரியங்காவுக்கு மாயாவதி, யோகி கேள்வி

லக்னோ: ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 100ஐ எட்டியுள்ளது. பாஜ ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் கடந்தாண்டு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தடுக்க தவறியதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக சாடின. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், கோடா மாவட்டத்திலும் தற்போது இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து இறந்து வருகின்றன. ஆக்சிஜன் குறைபாடு, சுகாதார வசதிகள் இல்லாததால் ஏற்படும் தொற்று நோய்களால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் தொடர்ந்து இந்த உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இந்த பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 9 குழந்தைகள் இறந்தன. தேசிய அளவில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி ஆராய்வதற்காக மத்திய அரசு மருத்துவக் குழுவை அனுப்பி வைக்க நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இது குறித்து உபி முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ராஜஸ்தானில் கோடா அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் உயிரிழந்தது மிகவும் வேதனை, வருத்தம் அளிக்கிறது. முதல்வர் அசோக் கெலாட்டும் அவரது அரசும் உணர்ச்சி அற்றவர்களாக, பொறுப்பற்றவர்களாக இருக்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் மிகவும் கொடூரமானது என்னவென்றால், காங்கிரஸ் தலைமையோ அல்லது அதன் மூத்த தலைவர்களோ குறிப்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவோ இது பற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர்.

உ.பி.யில் போன்று ராஜஸ்தானிலும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை அவர் சந்திக்காவிட்டால், உ.பி.யில் அரசியல் லாபத்துக்காக நாடகமாடினார் என்று திரித்து கூறப்படும்,’ என்று கூறியுள்ளார்.இதேபோன்று, உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `கோடா மருத்துவமனையில் 100 குழந்தைகள் இறந்திருப்பது கவலையளிக்கிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழந்திருப்பது சமுதாயத்தின் நாகரிக கொள்கை, மனிதத்தின் மதிப்பீடுகளுக்கு எதிரானது. காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளர் பிரியங்காவும் பெண்ணாக இருந்தும் இதனை புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது,’ என்று கூறியுள்ளார்.

* அரசியலாக்காதீர்கள்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று அளித்த பேட்டியில், ``கோடாவில் லோன் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான விவகாரத்தில் அரசு உணர்ச்சியற்று இல்லை. இதனை அரசியலாக்காதீர்கள். இந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு குறைந்து வருகிறது. இதனை மேலும் குறைக்க அரசு முயற்சிக்கும்,’ என்றார்.

Related Stories: