மாநில சட்டசபைகளுக்கு உள்ள சிறப்பு உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது: பினராயி விஜயன் விளக்கம்

திருவனந்தபுரம்: அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதாலேயே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கமளித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன் அரசியல் அமைப்புக்கு எதிரான விஷயங்களுக்கு துணைபோக மாட்டோம் என்பதை உணர்த்தவே தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவித்தார். கேரள அரசின் இந்த நடவடிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கியுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள சட்டசபையில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேறியது. கேரள சட்டசபையில் அங்கம் வகிக்கும் ஒரே பாஜக எம்.எல்.ஏ ஆன ராஜகோபால் மட்டும் தீர்மானத்தை எதிர்த்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், கேரள சட்டசபையில் தான் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்திற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநில சட்டசபைகளுக்கு என்று சிறப்பு உரிமைகள் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் எங்கும் கேள்விப்படாதது. முன் உதாரணமே இல்லாத பல்வேறு விஷயங்கள் நாட்டில் தற்போது நடைபெற்று வருவதால், தற்போதைய சூழலை அப்படியே விட்டுவிட முடியாது. சட்டசபைக்கு உள்ள சிறப்பு உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது” என்று கூறினார்.

Related Stories: