வரும் 6ம் தேதி முதல் திருப்பதியில் பக்தர்களுக்கு தினமும் 1 லட்டு இலவசம்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசியான வரும் 6ம் தேதி முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 6ம் தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 7ம் தேதி துவாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக நேற்று அதிகாலை சுப்ரபாத சேவையுடன் சுவாமி துயில் எழுப்பப்பட்டு கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிக்கட்டை, ஜவ்வாது உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னர், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருமலையில் தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி அளித்த பேட்டியில், ‘‘ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசியான வரும் 6ம் தேதி முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம், தினமும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்கு ஒரு லட்சம் லட்டுகள் வழங்கப்படும்,’’ என்றார்.திருப்பதியில் இலவச தரிசனம், திவ்ய தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஏற்கனவே சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டுகள் வழங்கப்படுவதால் ஆண்டுக்கு ₹250 கோடிக்கு மேல் தேவஸ்தானத்துக்கு இழப்பு ஏற்படுகிறது என அதிகாரிகள் கூறி வருகின்றனர். தற்போது, ஒரு லட்டு இலவசம் மூலம் மேலும் அதிக நஷ்டம் ஏற்படும் என தெரிகிறது.

Related Stories: