ஆஸ்திரியா நாட்டில் ரூ.15 லட்சம் வாடகை வீட்டில் வசித்த இந்திய பெண் தூதர் திரும்ப அழைப்பு: அரசு நிதியை முறைகேடாக செலவிட்டதாக குற்றச்சாட்டு

புதுடெல்லி:  ஆஸ்திரியா நாட்டுக்கான இந்திய தூதரக இருப்பவர் ரேணுபால். 1988ம் ஆண்டு பிரிவு ஐஎப்எஸ் அதிகாரியான இவர், ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்தார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் அவர் மீது அரசு நிதியை முறைகேடாக செலவிட்டது, வாட் வரி ரிட்டன் மோசடியாக திரும்ப பெற்றது உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் மற்றும்  மத்திய லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள்  இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் வியன்னா சென்று அதிரடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெண் தூதரக அதிகாரி ரேணுபால் விதியை மீறி ரூ.15 லட்சம் மாத வாடகையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தது தெரியவந்தது. மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் அங்குள்ள அரசு இல்லத்தில் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளார். வாட் வரி ரீபண்ட்களை மோசடியாக பெற்றுள்ளார். இது தொடர்பான விசாரணை அறிக்கை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நிதியை முறைகேடாக செலவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரேணுபாலை இந்திய வெளியுறவு அமைச்சக தலைமை இடத்துக்கு பணியிடம் மாற்றம் செய்து கடந்த 9ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ரேணுபாலை இந்தியா திரும்பவும், தூதருக்கான நிதி அதிகாரங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரேணுபால் ஆஸ்திரியாவிலிருந்து டெல்லி திரும்பினார்.

Related Stories: