மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் அஜித் பவார் துணை முதல்வரானார்: அசோக் சவான், ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோருக்கு கேபினட் பொறுப்பு

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். இதில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்றார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி அரசு பதவியேற்று ஒரு மாதத்துக்கு பிறகு அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 36 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்ற 36 அமைச்சர்களில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 10 கேபினட் அமைச்சர்களும் 4 இணையமைச்சர்களும் அடங்குவர். சிவசேனா சார்பில் 7 கேபினட் அமைச்சர்கள் 4 இணையமைச்சர்கள் பதவியேற்றனர். காங்கிரஸ் சார்பில் 8 கேபினட் அமைச்சர்கள் 2 இணையமைச்சர்கள் பதவியேற்றனர்.

தற்போது அமைச்சரவையில் முதல்வர் உட்பட மொத்தம் 43 அமைச்சர்கள் உள்ளனர். நேற்றைய பதவியேற்பு விழாவில், ேதசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் மற்றும் சிவசேனா இளைஞரணியான யுவசேனா தலைவரும், முதல்வர் உத்தவ் தாக்ரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்குள் அஜித் பவார் இப்போது இரண்டாவது முறையாக துணை முதல்வராக பதவியேற்றிருக்கிறார். முன்னதாக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் பாஜ.வுடன் கைகோர்த்து நவம்பர் 23ம் தேதி துணை முதல்வராக பதவியேற்றார். ஆனால் நவம்பர் 26ம் தேதி பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து தேவேந்திர பட்நவிஸ் தலைமையிலான மூன்று நாள் அரசு கவிழ்ந்தது.

விதான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்களுக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசில் இடம்பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோருக்கு உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றனர்.தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகருமான திலீப் வல்சே பாட்டீல், முன்னாள் சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்சய் முண்டே மற்றும் முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வட்டேத்திவர்(காங்கிரஸ்) ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்வர் உத்தவ் தாக்கரே, ேதசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்டவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மகாராஷ்டிரா அமைச்சரவையில் மொத்தம் 43 அமைச்சர்கள் இடம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் ராவுத் அதிருப்தி?

நேற்று நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவராகவும் கருதப்படும் சஞ்சய் ராவுத் கலந்து கொள்ளவில்லை. அவரது தம்பி சுனில் ராவுத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என சஞ்சய் எதிர்பார்த்ததாகவும் ஆனால், தம்பிக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ள சஞ்சய் ராவுத், பதவியேற்பு விழாவை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி சஞ்சய் ராவுத் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

கழட்டி விடப்பட்ட சிறிய கட்சிகள்

சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க சுவாபிமாண் சேத்கரி சங்கட்டனா, பகுஜன் விகாஸ் அகாடி, சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளும் ஆதரவளித்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியில் சேர்ந்தன. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இந்த கட்சிகள் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால், இந்த கட்சிகளின் தலைவர்கள் நேற்று நடந்த பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர்.

Related Stories: