குற்றச்சாட்டை ஏற்காவிடில், குற்றம்சாட்டுபவரையே வந்து சேரும் நினைவில் கொள்ளுங்கள்: புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் கிரண்பேடி அறிவுரை

புதுச்சேரி: தனது மிரட்டலால் அரசு அதிகாரி மரணமடைந்தார் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்ததற்கு ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கட்சி உதய தின விழாவில் முதல்வர்  நாராயணசாமி பேசியதாவது:  மத்திய மோடி அரசு புதுச்சேரிக்கு 5 விருதுகளை அளித்துள்ளது. இந்த விருதுகளுக்கு காரணம், முக்கிய பொறுப்பு தலைமை செயலர்தான் என கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். நமது ஆட்சிக்கு, காங்கிரஸ்  கட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என காழ்ப்புணர்ச்சியுடன் கவர்னர் செயல்படுகிறார். விருது கிடைத்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மத்திய அரசு உரிய நிதி தரவில்லை. கிரண்பேடி தொல்லை. இதையும்  மீறி இந்த விருது  கிடைத்துள்ளது.

இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை கிரண்பேடி தடுக்கிறார். தனக்கு அதிகாரம் இல்லை என்றாலும் அதிகாரிகளை அழைத்து தொல்லை கொடுக்கிறார், மிரட்டுகிறார்.  இதனால் ஒரு அதிகாரி இறந்தே போய் விட்டார். ஜிஎஸ்டி  நிதியைகூட 3 மாதமாக மத்திய அரசு தரவில்லை. மத்திய அரசின் முட்டுக்கட்டை, கிரண்பேடி தொல்லை இதையெல்லாம் மீறி சாதனை படைத்திருப்பதற்கு கூட்டு பொறுப்புதான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு இமெயில் அனுப்பியுள்ளார். அதில், நீங்கள் கண்ணியத்தை இழந்து பேச வேண்டாம். என் மீதும், அரசியலமைப்பு  அலுவலகமான ஆளுநர் அலுவலகம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறீர்கள். கடந்த சில நாட்களாக எல்லை மீறி கண்ணியம் இழந்து பேசி வருகிறீர்கள். குற்றச்சாட்டை ஏற்காவிடில், அது குற்றம்சாட்டுபவரையே வந்து சேரும்  என்ற புத்தர் வரிகளை நினைவில் வைத்து கொள்ளுங்கள். புதுச்சேரி மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஆளுநர் அலுவலகம் செயல்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: